மணீஷ் சிசோடியாவிற்கு 'சவுத் குரூப்' உடன் என்னதொடர்பு? பின்னணியில் மிகப்பெரிய தென்மாநில விஐபி?
டெல்லி: டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ நேற்று கைது செய்ததன் பின்னணியில், அவருக்கு சவுத் குரூப் மதுபான லாபிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், அவர்களுக்கு மணீஸ் சிசோடியா மதுபான விநியோக உரிமையை முறைகேடாக கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டும் தான் காரணமாம். இதனிடையே சவுத் குரூப் என சிபிஐ கூறும் அனைவரும் தென்மாநிலத்தில் மிகப்பெரிய பிரபலங்கள் ஆவர்.
கலால் துறை அலுவலகத்தில் இருந்த சில கணிணி ஆதாரங்கள், சிசோடியாவின் செயலாளரின் சாட்சியம். சிசோடியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியினரோ, இதை முற்றிலும் மறுக்கின்றனர். முழு விசாரணையும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் மதுபான விநியோக உரிமையை தென்மாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு வழங்குவதற்காக அதன் கொள்கையை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மாற்றியதாகவும், அதற்கு ஈடாக 100 கோடியை ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தகவல் தொடர்பு பொறுப்பாளரான விஜய் நாயருக்கு தெற்கு டெல்லி ஹோட்டலில் சவுத் குரூப் பிரதிநிதிகளால் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சர்ச்சை எழுந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட இந்த கொள்கை, தென் குழுமத்தின் மதுபான லாபிக்கு தேவையற்ற பலன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது என்பதை தாங்கள் கண்டுபிடித்ததாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.

12 சதவீதம் லாபம்
பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி சவுத் குரூப் (தென்மாநிலத்தவர்) சேர்ந்தவர்கள் விஜய் நாயரை சந்தித்து, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் சில ஆவணங்களின் நகல்கள் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த ஆவணம் சிசோடியாவால் தனது செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின் நகல் ஆகும். இந்த ஆவணம், GoM இன் பரிந்துரைகளின் வரைவு எனக் கூறப்படும், அதிக விற்றுமுதல் தகுதியை வழங்குவதோடு, மொத்த விற்பனையாளர்களுக்கான லாபத்தை 5% லிருந்து 12% ஆக மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் தெற்கு குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாக விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை சிபிஐ ஆல் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினேஷ் அரோரா என்பவர் மூலம் விஜய் நாயருக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஈடாக 5 சதவீதம் லாபத்திற்கு பதில் 12% லாபம் கிடைக்கும் வகையில் கலால் கொள்கையை சிசோடியா மாற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது.

விஷயம் எப்படி தெரிய வந்தது
சிசோடியாவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கணினி மற்றும் அவரது செயலாளரின் நீதித்துறை அறிக்கை ஆகியவை சிசோடியாவை சிக்கவைத்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல ஆங்கில ஊடகத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி கலால் துறையின் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனத்தை ஆய்வு செய்தபோது, சிபிஐ, கலால் கொள்கை வரைவு ஆவணங்களில் ஒன்றை, துறைசாராத கணிணி ஒன்று அங்கு இருந்ததை கண்டறிந்தது. கலால் துறை அதிகாரி ஒருவரை விசாரித்ததில், அது சிசோடியாவின் அலுவலக கணினி என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து ஜனவரி 14-ம் தேதி துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்து அந்த கணினியை சிபிஐ கைப்பற்றியது. சிபிஐ அதன் தடயவியல் குழுவின் உதவியுடன் சில பதிவுகளை மீட்டெடுத்ததாக கூறப்படுகிறது.தடயவியல் பரிசோதனையில் இந்த கோப்பு வெளியில் இருந்து உருவானது என்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

சாட்சியாக மாறினார்
சிபிஐயால் சம்மன் அனுப்பப்பட்டபோது, சிசோடியாவின் செயலாளர், 1996 பேட்ச் DANICS அதிகாரி, '12% லாப வரம்பு விதி' என்பது சிபிஐ கண்டறிந்த GoM நகலின் வரைவில் உருவானது என்று கூறினார். இதையடுத்து சிசோடியாவின் செயலாளரை வழக்குத் தரப்பு சாட்சியாக்கியது. அதன்பின்னர் சிபிஐ சிசோடியாவை கைது செய்தது என்று ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கலால் கொள்கை என்ன
சிபிஐயின் கூற்றுப்படி, புதிய கலால் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. "இந்தக் குழு சில்லறை அளவில் மண்டல உரிம முறையைப் பரிந்துரைக்கவில்லை . அத்துடன் மொத்த விற்பனை மாதிரியை தனியார்மயமாக்கவில்லை, இது சிசோடியாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, நிபுணர் குழுவின் பரிந்துரையை மாற்ற GoM இன் வழிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதாம்.

தென்மாநில குழு என்ன
அமலாக்கத்துறை தகவலின் படி சவுத் குரூப்பின் முக்கிய உறுப்பினர்கள் மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோல் தொகுதியின் YSR காங்கிரஸ் எம்.பி. அவரது மகன் மகுண்ட ராகவ ரெட்டி; சரத் ரெட்டி, அரவிந்தோ பார்மாவின் நிர்வாகமற்ற இயக்குனர்; மற்றும் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா. நீண்ட விசாரணைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு முன்பு மகுண்ட ராகவ ரெட்டியை அமலாக்கத்துறை கைது செய்தது. ராகவா கைது செய்யப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நடந்த மோசடி குறித்த ஆரம்ப விசாரணையில் அவரது பெயர் அடிபட்டது. இருப்பினும், அவரது தந்தை இந்த தகவலை மறுத்துவிட்டார். மகுண்டா குடும்பம் பல தசாப்தங்களாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் கர்நாடகாவை தளமாகக் கொண்ட UB குழுமத்தின் தென்னிந்திய விநியோகஸ்தர்களாக இருந்துள்ளனர்.

கவிதாவின் ஆடிட்டர்
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆடிட்டரான புச்சிபாபு கோரண்ட்லாவை, டெல்லி கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதற்காக சிபிஐ கைது செய்தது. புச்சி பாபு முன்பு தெலுங்கானா முதல்வர் மகள் கே.கவிதாவின் பட்டயக் கணக்காளராக இருந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மொத்த மற்றும் சில்லறை விற்பனை உரிமம் பெற்றவர்களுக்கும், அதன் பயனாளிகளுக்கும் தவறான ஆதாயத்தை ஏற்படுத்தியதாக புச்சி பாபு மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல தென்மாநிலத்திலும் முக்கிய கட்சிகளின் பிரபலங்களுக்கும் இந்த விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications