துப்பாக்கிச் சூடு, கார் ஏற்றி படுகொலை, செங்கோட்டை வன்முறை-2021 விவசாயிகள் போராட்டத்தின் துயரங்கள்!
டெல்லி: விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் உலகை உலுக்கிய 2020-21 போராட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க வகை செய்தது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி 2020-ம் ஆண்டின் இறுதியில் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 2021-ம் ஆண்டு டிசம்பர் வரை உறைபனி, கடும் குளிர், கொளுத்திய வெயிலிலைப் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்றது. 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றதால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

2021 டெல்லி விவசாயிகள் போராட்டம் பெரும் வன்முறைகளையும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட துயரங்களையும் கொடூரங்களையும் எதிர்கொண்டது என்பது வரலாறு. அந்த துயரப் பக்கங்களில் சில..
2021-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதியன்று போராட்டம் நடத்திய விவசாயிகள் டெல்லி செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். இப்பேரணியை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் அங்கு சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தின் கொடியை ஏற்ற பெரும் பதற்றம் ஏற்பட்டது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டை பகுதியே போர்க்களமாக இருந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் மீது தேச துரோக வழக்குகளும் பாய்ந்தன.
2021-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி டெல்லி விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 8-ந் தேதி டெல்லி சிங்கு எல்லையில் போராடிய விவசாயிகளை கலைக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளின் முழுமையான ஆதரவைப் பெற்றது. நாடாளுமன்றத்தை முடக்க வைத்தது.
2021-ம் ஆண்டு ஆக.28-ல் தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் கொடூரமாக தடியடி நடத்தினர். இந்த தாக்குதலிலும் பலர் படுகாயமடைந்தனர்.
2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் மொத்தம் 8 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.
இத்தனை துயரங்களுக்குப் பின்னர்தான் 2021-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அத்துடன் விவசாயிகளிடமும் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி. அத்துடன் 2021- நவம்பர் 29-ந் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளும் ஓராண்டு கால டெல்லி போராட்டத்தை முழுமையாக வாபஸ் பெற்றனர்.
ஆனால் 2021 போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதால் இப்போது விவசாயிகள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்கி உள்ளனர். இதனால்தான் டெல்லி விவசாயிகள் போராட்டம் Farmers Protest 2.0 என ஊடகங்களால் குறிப்பிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications