"70 பீஸா வெட்டுவோம்!" கையில் வாள், தலையில் காவி தொப்பி.. அப்தாப் வாகனத்தை சுற்றி வளைத்த கும்பல்
டெல்லி: சாரதாவை கொலை செய்த அப்தாப்பை ஏற்றிக் கொண்டு வந்த போலீசார் வாகனத்தை திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் அரங்கேறிய சாரதா படுகொலை பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. காதலியைக் கொலை செய்த பிறகு, அந்த கொடூரன் செய்த செயல்கள் நாட்டு மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த படுகொலை தொடர்பாகக் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த கொலையை நேரில் பார்த்தவர்கள் இல்லை என்பதால், அவனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
காதலுக்கு குறுகே நின்ற பெற்றோர்! சைக்கோவாகி தாய்-தந்தையை கொலை செய்த மகன்! இறந்த உடல்களுடன் இப்படியா?

அப்தாப்
மேலும், அப்தாப்பிடம் வாக்குமூலம் பெறும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். தற்போது வரை வழக்கு விசாரணையில் அப்தாப் உரிய ஒத்துழைப்பைக் கொடுத்து வருவதாகவே போலீசார் தெரிவித்துள்ளனர். இப்போது அப்தாப் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். முதல்முறை குற்றம் செய்பவர்களை அடைக்கும் செல்லில் அவனை அடைத்துள்ளனர். அவன் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அவனுக்குத் தக்க பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதல்
ஏற்கனவே அவனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு முறை உண்மையைக் கண்டறியும் பாலிகிராஃப் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இரண்டாம் முறையாக பாலிகிராஃப் சோதனைக்கு அவனை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென அந்த வேனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்தனர். அவர்களில் பலர், கைகளில் வாளை வைத்திருந்தனர். மேலும், சிலர் காவி தொப்பியும் கூட அணிந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், போலீசார் துரிதமாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்தாப்பை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு
இந்தச் சம்பவம் டெல்லி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு முன்பு நடந்துள்ளது. பாலிகிராப் சோதனை முடித்துவிட்டு அப்தாப்பை அழைத்து வந்த போது, திடீரென சுமார் 15 பேர் அந்த வாகனத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் கைகளில் வாள் இருந்த நிலையில், வாகனத்தின் உள்ளே ஏறவும் அவர்கள் முயன்றுள்ளனர். நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். போலீசார் வாகனத்தில் ஏற முயன்ற சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

70 துண்டுகளாக வெட்டுவோம்
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் எங்கள் தங்கை மரணத்திற்கு நிதி பெற வந்தோம். அவன் (அப்தாப்) எங்கள் சகோதரியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டியுள்ளான். நாங்கள் அவனை 70 துண்டுகளாக வெட்டிவிடுவோம். போலீசார் அவனுக்குப் பாதுகாப்பு தருகிறார்கள். அவனைக் கொல்ல வேண்டும். எங்கள் தங்கைகளுக்கும் தாய்மார்களுக்கும் இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால்.. நாங்கள் உயிருடன் இருந்து என்ன செய்ய" என்று ஆவேசமாகக் கூறுகின்றனர்.

இந்து சேனா
இந்தச் சம்பவத்திற்கு இந்து சேனா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அப்தாப் ஒரு இந்துப் பெண்ணை எப்படி துண்டு துண்டாக வெட்டினார் என்பதை முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.. இந்த சமூக ஆர்வலர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனப் புரியவில்லை. அதேநேரம் இந்தியா அரசியலமைப்பிற்கு எதிரான எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இந்தியச் சட்டத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
போலீசார் அப்தாப்பை அங்கு கூட்டி வர உள்ளனர் என்பதை இவர்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர். இதனால் போலீஸ் வாகனத்திற்கு முன்பு, சரியாக இவர்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது திடீரென வெளியே வந்த சிலர் போலீஸ் வாகனத்தைத் தாக்க முயன்றுள்ளனர். இது குறித்து போலீஸ் டிசிபி ரோகினி, "இந்தச் சம்பவத்தில் இருவரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் வந்த காரையும் கைப்பற்றியுள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை" என்றார்.