தடம் புரண்ட கோரமண்டல் ரயில்.. பின்னாலேயே வந்து மோதிய யஸ்வந்த்பூர்- ஹவுரா ரயிலுக்கு என்னாச்சு
டெல்லி: ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில்கள் விபத்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது சிக்கிய மற்றொரு ரயிலான யஸ்வந்த்பூர்- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைக்கும் விதத்தில் மோசமான விபத்து அரங்கேறியது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலேயே நடந்த மிக மோசமான ஒரு விபத்தாக இது கருதப்படுகிறது.
நள்ளிரவைத் தாண்டியும் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்னும் அவை முடியவில்லை. இதற்கிடையே இந்த விபத்து குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

12841 என்ற எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றைய தினம் வழக்கம் போல 3.20 மணிக்கு மேற்கு வங்கத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் மாலை பாலசோர் மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது.
சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் முதலில் பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்துள்ளனர். இதுவரை விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மீட்பு படையினர் முடிந்த வரை சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு ரயில் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது கோரமண்டல் ரயிலின் 10-12 பெட்டிகள் தடம் புரண்ட பெட்டிகள் எதிரே இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அங்கே வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் இதில் மோதியுள்ளது.
யஸ்வந்த்பூர்- ஹவுரா விரைவு ரயில் இதில் மோதிய நிலையில், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதுவே விபத்தை மோசமானதாக மாற்றியுள்ளது. அந்த ரயிலின் எத்தனை பேர் பணித்தனர், அதில் எத்தனை பெட்டிகள் பாதிக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் இதுவரை துல்லியமாக வெளியாகவில்லை. அதேநேரம் விபத்தின் பாதிப்பு இத்துடன் நிற்கவில்லை. மூன்றாவதாக அங்கே டிராக்கில் வந்த மற்றொரு சரக்கு ரயிலும் தடம் புரண்ட பெட்டிகளில் மோதியுள்ளது.
இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்து ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விபத்தில் சுமார் 50-60 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 400 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications