அதானி மீதான புகார்கள்.. எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நிற்போம்! பட்டுனு பதில் சொன்ன கனிமொழி
அதானி குழுமம் புகார் தொடர்பாக விவாதம் தேவை என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சி எம்பிகள் நேற்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அன்று பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.

முடங்கி நாடாளுமன்றம்
இதையடுத்து நாடாளுமன்ற 3ஆம் அமர்வு நேற்று கூடியது. அதில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடக்க இருந்தது. இருப்பினும், நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்தே அமளி ஏற்பட்டது. அதானி குழுமம் குறித்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான மோசடி குறித்து விவாதிக்கக் கோரியும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடங்கியது.

பொதுத்துறை நிறுவனங்கள்
நாடாளுமன்றம் முதலில் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்றைய தினம் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸின் ஜோதிமணி, "எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொதுத்துறை வங்கிகளின் நிதியை வைத்து மிகப் பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் பொதுமக்களின் பணம். இதனால் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ராகுல் காந்தி கடந்த 8 ஆண்டுகளாகவே அதானிக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்வதாகச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

கனிமொழி
திமுக எம்பி கனிமொழி பேசுகையில், "நாடு முழுக்க பேசப்படும் அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேச வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும், பாஜக இதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.. அவை நடவடிக்கைகளை மட்டும் ஒத்தி வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நிற்போம்
தமிழ்நாடு முதல்வர் இந்த கருத்தையே வலியுறுத்தி வருகிறார். எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து உறுதியோடு நின்று மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார். சாமானியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் இந்த நிகழ்வுகள் பற்றிக் குறித்து உடனடியாக விசாரணையும் விவாதமும் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும். இதில் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நிற்போம்" என்று அவர் தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம்
தொடர்ந்து பேசிய காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம், "அதானி குழுமம் மீது வெளிநாட்டு அமைப்பு புகார் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அதிகாரிகள் நாட்டு மக்களிடம் என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும். பொதுமக்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது தனியார் நிறுவனம் பற்றியது என்றாலும் கூட இதில் பொதுத்துறை நிறுவனங்களும் சம்மந்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை அரசு முழுமையாக விளக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications