ஐடி ஊழியர்கள் வெறுக்கும் "வருமான வரி.." எப்போது கொண்டு வரப்பட்டது? எதற்காக இது! சுவாரசிய பின்னணி
டெல்லி: இப்போதெல்லாம் ஐடி ஊழியர்கள் வருமான வரி என்றாலே அலறி ஓடுகிறார்கள். கேட்டால் சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை வரிக்கே போய்விடுவதாகப் புலம்புகிறார்கள். உண்மையில் இந்த வருமான வரி சட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் மற்றும் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐடி ஊழியர்கள் இப்போது அலறுவது வருமான வரிக்குத் தான். சம்பளத்தின் குறிப்பிட்ட தொகை வரிக்கே கொடுக்க வேண்டி இருக்கிறது என்பதே இவர்கள் புலம்பல். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறும்.

நேற்றைய பட்ஜெட்டில் கூட புதிய நடைமுறையைப் பின்பற்றுவோருக்குச் சின்ன மாற்றத்தைச் செய்திருந்தார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17,500 வரை சேமிக்க முடியும். அது சரி இந்த வருமான வரி எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் சுவாரசிய பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வருமான வரி: நமது நாட்டில் இன்று ஜூலை 24ம் தேதி வருமான வரி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1860இல் இதே நாளில் தான் சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவின் நிதி வரலாற்றில் குறிப்பிடத்தக்கத் திருப்புமுனையாகும். வெவ்வேறு மூலங்களிலிருந்து வரும் வருமானத்திற்கு வரி விதிக்கவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகம் சம்பாதிப்பவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்பதே இதன் அடிப்படையாகும்.
எதற்காக: 1860ம் ஆண்டிலேயே வருமானத்திற்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்ட போதிலும், 1922இல் தான் கொண்டு வரப்பட்ட வருமான வரிச் சட்டம் தான் நமது நாட்டின் வரி முறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. மிகவும் விரிவாக உருவாக்கப்பட்ட இந்த சட்டம் வருமான வரி அமைப்பை முறைப்படுத்துகிறது. மேலும், தற்போது நடைமுறையில் இருக்கும் நவீன வரி நிர்வாகத்திற்கான அடித்தளமாகவும் இதுவே இருந்து வருகிறது. அரசின் வருமானத்தை அதிகரிக்கவே வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1924இல், வருமான வரிச் சட்டத்தை நிர்வகிக்கப் பொறுப்பான ஒரு சட்டப்பூர்வ அமைப்பை அரசு உருவாக்கியது. இந்த அமைப்பு வருமான வரி சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.. அதைத் தொடர்ந்து அப்போது இருந்த ஒவ்வொரு மாகாணத்திற்கும் வருமான வரி ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், உதவி ஆணையர்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
கணினிமயமாக்கல்: இதை மேலும் முறைப்படுத்த ஐஆர்எஸ் ஸ்டாப் காலேஜ் 1957இல் நிறுவப்பட்டது. குரூப் ஏ அதிகாரிகள் 1946இல் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஆரம்ப பயிற்சி பெற்றனர். கணினிமயமாக்கல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட துறைகளில் இதுவும் ஒன்று. 1981இல் கணினி மூலம் இ சலான்கள் கொண்டு வரப்பட்டன. இப்படியே பல அதிநவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து 2009ஆம் ஆண்டில், பெங்களூரில் சென்டிரல் பிராசசிங் சென்டர் நிறுவப்பட்டது.
நமது நாட்டில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அது பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. மேலும், இப்போது நமது நாட்டின் வருமானத்தில் இது மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் வரி முறையை மேம்படுத்த எடுக்கப்படும் தொடர் முயற்சிகளைக் கொண்டாடும் வகையிலேயே இந்த வருமான வரி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய வருமான வரி அமைப்பின் முக்கிய மைல்கல்கள்:
1860: சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை அறிமுகம் செய்தார்.
1922: விரிவான வருமான வரிச் சட்டம் நிறுவப்பட்டது
1924: மத்திய வருவாய் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது
1946: குரூப் ஏ அதிகாரிகள் வருமான வரித் துறையில் பணியமர்த்தப்பட்டனர்.
1957: ஐஆர்எஸ் பணியாளர் கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவே பின்னாட்களில் நேரடி வரிகளுக்கான தேசிய அகாடமி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1981: வருமான வரித்துறையில் கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டது
2009: பெங்களூரில் சென்டிரல் பிராசசிங் சென்டர் தொடங்கப்பட்டது.
2014: வருமான வரித்துறையின் புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.
2020: வருமான வரி சார்ந்த புகார்களை நிர்வகிக்கவும் வருவாயைப் பெறுவதற்கும் "விவாட் சே விஸ்வாஸ்" திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
2021: இ-ஃபைலிங் செய்ய புதிய போர்டல் தொடங்கப்பட்டது
பழைய முறை: நமது நாட்டில் இப்போது பழைய முறை, புதிய முறை என இரண்டு வகை வருமான வரி முறை அமலில் இருக்கிறது. இதில பழைய முறையில் இருப்போருக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை.. ரூ 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் என்றால் 5% வருமான வரி செலுத்த வேண்டும். ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 20% வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி செலுத்த வேண்டும்.
புதிய முறை: புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில் ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி இல்லை. ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ 7 லட்சம் பெறுவோருக்கு 5% வருமான வரி செலுத்த வேண்டும்.. ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ 10 லட்சம் பெறுவோருக்கு 10% வருமான வரியும், ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ 12 லட்சம் பெறுவோருக்கு 15% வரியும் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications