இந்தியாவில் மங்கி பாக்ஸ்? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுங்க.. டிரீட்மெண்ட் என்ன?
டெல்லி: நமது நாட்டில் இப்போது ஒருவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது மாதிரிகள் இப்போது சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது இந்தியாவிலும் நுழைந்து இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் இதன் அறிகுறிகள், சிகிச்சை என்னவென்று நாம் பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களாகவே உலகின் பல நாடுகளை மங்கி பாக்ஸ் பாதிப்பு அச்சுறுத்தி வந்தது. வழக்கமாக ஆப்பிரிக்காவில் மட்டுமே பரவும் இந்த மங்கி பாக்ஸ் சில மாதங்களாக உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

இந்த மங்கி பாக்ஸ் என்றால் என்ன.. இது முதலில் எங்குப் பரவியது.. இதன் அறிகுறிகள் சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
குரங்கு அம்மை: மங்கி பாக்ஸ் பாதிப்பு எப்போதும் ஆப்பிரிக்காவில் ஓரிரு நாடுகளில் தான் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் முதலில் காங்கோ குடியரசு நாட்டிலேயே மங்கி பாக்ஸ் முதலில் பரவியது. அதைத் தொடர்ந்து கிழக்கு ஆபிரிக்காவின் மற்ற பகுதிகளுக்கும் இந்த பங்கி பாக்ஸ் பரவியது. பொதுவாக வைரஸ் என்றாலே பல திரிபுகள் இருக்கும். அப்படி கிளேட் 1 பி என்ற திரிபால் தான் இந்த முறை மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துவிட்டது. பொதுவாக ஒரு வைரஸ் பாதிப்பு உலகில் பரவும் போது உலக சுகாதார அமைப்பும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும். அப்படி உலக சுகாதார அமைப்பு வெளியிடும் அறிவிப்புகளில் ஹை அலர்ட் அறிவிப்புகளில் ஒன்று தான் இதுவாகும். இதற்கு முன்பு கடைசியாக 2022இல் உலக சுகாதார அமைப்பு மங்கி பாக்ஸ் பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்து இருந்தது. இப்போது 2 ஆண்டுகளில் மீண்டும் இந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
எங்கே பரவியது: இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு கடந்த 1958இல் டென்மார்க் நாட்டில் தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஆய்வகத்தில் வைக்கப்பட்டு இருந்த குரங்குகளில் தான் இந்த மங்கி பாக்ஸ் முதலில் ஏற்பட்டது. இருப்பினும், அப்போது மனிதர்களிடையே அந்த பாதிப்பு ஏற்படவில்லை. 1970இல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் தான் இது முதலில் மனிதர்களுக்குப் பரவியது. அங்கு ஒன்பது மாத சிறுவன் ஒருவனுக்கு இந்த மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டது..
அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, தசை வலி ஆகியவை மங்கி பாக்ஸின் முக்கிய அறிகுறிகள் ஆகும். மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்குத் தோலில் அம்மை போன்ற புண் ஏற்படும்.. அதுவே முக்கிய அறிகுறியாகும்.. தற்போதைய சூழலில் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகள் மங்கி பாக்ஸுக்கு இல்லை. இருப்பினும், டென்மார்க், அமெரிக்கா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் மட்டும் ஒரு சில தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
எப்படிப் பரவும்: இது கொரோனாவை போல காற்றில் எல்லாம் பரவாது.மங்கி பாக்ஸ் பாதிப்பு இருப்போருடன் நெருங்கிப் பழகினால் மட்டுமே மங்கி பாக்ஸ் ஏற்படும். அல்லது நோயாளிகள் உடலில் இருந்து வெளியேறும் நீர் பட்டாலும் கூட மங்கி பாக்ஸ் ஏற்படும். ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மட்டுமே மங்கி பாக்ஸ் பரவும் என்ற தவறான புரிதல் இருக்கிறது. ஆனால், அப்படி இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இது பரவ வாய்ப்பு அதிகம் என்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications