கொரோனா அதிகரிக்க இதுதான் காரணமா? எந்த அளவு பாதிப்பு எகிறும்.. ஐஐடி சயிண்டிஸ்ட் சொன்ன தகவல்
டெல்லி: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டாத பட்சத்தில் கணிதவிய மாடல் தேவையில்லை என்ற ரீதியில் ஐஐடி பேராசிரியர் டாக்டர். மனிந்திர அகர்வால் சொல்லியிருக்கிறார். தற்போது அதிகரித்து வரும் வைரஸ் பற்றிய ஆரம்ப கட்ட ஆய்வுகளின் படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் கொரோனா 4-வது அலைக்கு நிகராக பாதிப்பு இருக்கும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் தணிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டுகளாக தொற்று பாதிப்பின் தாக்கம் குறைந்தததால் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி சொல்லப்போனால் கொரோனாவையே மக்கள் மறந்துவிட்டனர் என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறியிருந்தது.

தினசரி கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு சில நூறுகளில் தான் இந்திய அளவில் பதிவாகி வந்தது. தமிழகத்தில் மிகச் சிலருக்கே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எகிறத் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. நேற்றைய பாதிப்பு 5,300- ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு 6,050 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் 28,303-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் அதிகரிக்கும் இந்த பாதிப்புக்கு கொரோனா வைரசின் மாறுபாடு அடைந்த XBB.1.16 - வைரஸ் திரிபே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக சென்று கொண்டு இருப்பதால் மக்கள் மத்தியிலும் அச்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இப்படி கொரோனா வைரஸ் பற்றிய பதற்றமும் பரபரப்பும் மீண்டும் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
4-வது அலைக்கு நிகராக பாதிப்பு
இந்த நிலையில், தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சாதாரண இருமல், சளி போன்று கொரோனா வைரசும் போய்விடும் என்று ஐஐடி பேராசிரியர் மனிந்த்ரா அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பது குறித்த கணிதவியல் மாடலை ஐஐடி பேராசிரியர் டாக்டர். மனிந்திர அகர்வால் முந்தைய கொரோனா அலைகளின் போது கணித்து இருந்தார். இவரது கணிப்பு மிகவும் துல்லியமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மீண்டும் கணிதவியல் மாடலைக் கொண்டு கணிக்க வேண்டிய தேவை இந்த முறை இல்லை என்று சொல்கிறார் அகர்வால்.. ஏனென்றால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டாத பட்சத்தில் கணிதவிய மாடல் தேவையில்லை என்ற ரீதியில் சொல்லியிருக்கிறார். தற்போது அதிகரித்து வரும் வைரஸ் பற்றிய ஆரம்ப கட்ட ஆய்வுகளின் படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் கொரோனா 4-வது அலைக்கு நிகராக பாதிப்பு இருக்கும் எனவும் ஐஐடி பேராசிரியர் தெரிவித்து இருக்கிறார்.
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது
இது தொடர்பாக அகர்வால் கூறியிருப்பதாவது:- ''தற்போதைய சூழலில் இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருந்தாலும் எந்த ஒரு மாவட்டத்திலும் பாதிப்பு 100- க்கு மேல் செல்லவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் தற்போதைய சூழல் கவலைப்படும் அளவுக்கு இல்லை. தற்போது ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகரித்தால் கூட நிலமை இயல்பாகவே இருக்கும். இதுவும் ஒரு வகையான காய்ச்சல் தான். இதன் விளைவு காய்ச்சல் மற்றும் சளி வடிவில் நமக்கு தெரியும். உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைந்ததே தற்போது தொற்று அதிகரிப்புக்கு காரணம். கொரோனா மூன்றாவது அலை பரவலின் போது இயற்கையான எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருந்தது. ஆனால் தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது. இயற்கையான நோய் எதிர்ப்பு, ஆற்றலை அதிகரிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்னவென்றால் வைரசால் பாதிக்கப்படுவதுதான். மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் போதுதான் ஆண்டிபாடிஸ் எதிர்த்து போரிட தொடங்கும். இதன் மூலம் இயற்கையான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கவலைப்பட தேவையில்லை. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவதோடு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று மருந்துகளை எடுத்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதும் போதுமானது" என்றார்.












Click it and Unblock the Notifications