"இந்தியாவின் மொத்த கடன் ரூ.171 லட்சம் கோடி.. அடுத்தாண்டு மேலும் உயரும்.!" மத்திய அரசு தகவல்
டெல்லி: நடப்பு நிதியாண்டில் மொத்தக் கடன் ₹ 171.78 லட்சம் கோடியாக இருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58%ஆகும். அடுத்த நிதியாண்டில் நமது நாட்டின் கடன் மேலும் அதிகரித்து ₹ 185 லட்சம் கோடியை எட்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் 23ம் தேதி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இப்போது மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே நமது நாட்டின் கடன் இப்போது எவ்வளவாக இருக்கிறது.. அடுத்த நிதியாண்டில் அது எவ்வளவாக அதிகரிக்கும் என்பது குறித்த தகவல்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
மொத்த கடன் எவ்வளவு: அதில் கடந்த 2024 மார்ச் கணக்குப்படி நமது நாட்டின் மொத்தக் கடன் ₹ 171.78 லட்சம் கோடியாக இருக்கிறது. இது வெளிநாட்டுக் கடன் உட்பட அனைத்து கடன்களின் மொத்த மதிப்பாகும். இது நமது நாட்டின் மொத்த ஜிடிபியில் 58.2 சதவீதமாக இருக்கிறது. அடுத்த நிதியாண்டில் நமது நாட்டின் மொத்த கடன் ₹ 185 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்போது அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.8 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியம் கடந்த ஏப்ரல் மாதம் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24ஆம் ஆண்டிலேயே 3.57 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதில்: அதேபோல மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த சௌத்ரி, "2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் நிலையான விலையில் தனியார் நுகர்வு செலவினத்தின் (private final consumption expenditure) வளர்ச்சி விகிதம் முறையே 6.8 சதவீதம் மற்றும் 4 சதவீதம் இருக்கிறது. இதே காலகட்டத்தில் தற்போதைய விலையில் இந்த PFCEஇன் வளர்ச்சி விகிதம் முறையே 14.2 சதவீதம் மற்றும் 8.5 சதவீதமாக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் கடன்கள்: மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த சௌத்ரி, "2021-22ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு (NBC) 15வது நிதிக்குழு பரிந்துரைத்தபடி மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திராவுக்கு எவ்வளவு நிதி: அதேபோல மற்றொரு கேள்விக்கு அவர் நிதி ஆயோக் பரிந்துரையைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார். நிதி ஆயோக் அமைப்பும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ன் கீழ், ஆந்திராவின் பின்தங்கிய ஏழு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு ₹ 300 கோடி வீதம் ₹ 2,100 கோடி ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது. அதைக் குறிப்பிட்ட அமைச்சர் பன்கஜ் சவுத்ரி, இதற்காக நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஏழு பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காகக் கீழ் ₹ 1,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications