தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு 'விசில்' ஊதப்பட்டுவிட்டது! தவெக மீது பிரவீன் சக்கரவர்த்திக்கு பாசம்
சென்னை: 'தமிழக சட்டசபை தேர்தல் 2026-க்கு' விசில் ஊதப்பட்டுவிட்டது என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார். தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு விசில் ஊதப்பட்டுவிட்டது. அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி ஆயத்தமாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியில் சிலரால் கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
ஆட்சியில் பங்கு என்ற ஒரு கருத்தை விஜய் முன்னெடுத்துள்ள நிலையில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியில் பலர் விரும்புகிறார்கள். இதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.
ஆரம்பத்தில் ராகுலுக்கு நெருக்கமானவர், காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்ததாக தகவல்கள் கிடைத்தன. இது திமுக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியை ராகுல் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பிரவீன் சக்கரவர்த்தியோ, "தவெகவில் இணையும் எண்ணம் இல்லை. நான் விஜய்யை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை.
விஜய்யுடன் இட்லி, தோசை, வடை சாப்பிடக் கூட இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்" என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் தொகை அதிகம் என பிரவீன் கூறியிருந்தது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்த முறை ராகுல், பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை திமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால் அப்படி எதுவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பிரவீனோ, " நான் உத்தரப்பிரதேசத்தை ஒப்பிட்டு பேசவில்லை" என கூறினார்.
இதையடுத்து ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட் போட்டிருந்தார். மேலும் இந்த விஷயங்களை ஆமோதித்து மற்றொரு எம்பியான விஜய் வசந்த் பேசியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் யாரும் கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்ததை குறிப்பிடும் வகையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். ராகுலும் கட்சி தலைமையும் அத்தனை அறிவுறுத்தியும் பிரவீன், தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications