அன்று கறுப்பு சட்டை.. இன்று வெள்ளை சட்டை! சிபிஐ விசாரணையால் மிரண்டுபோனாரா விஜய்? விமர்சிக்கும் திமுக
டெல்லி: கடந்த 12 ஆம் தேதி நடந்த சிபிஐ விசாரணைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார் விஜய். கருப்பு சட்டை அணிந்து சிபிஐ விசாரணைக்கு சென்றதால், விஜய் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டார் என குறியீடாகச் சொல்வதாக தவெகவினர் கூறி வந்தனர். இந்நிலையில், இன்று வெள்ளை சட்டை அணிந்து சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

இதையடுத்து தவெக தலைவரான நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆஜராக கடந்த 6 ஆம் தேதி சம்மன் அனுப்பினர். கடந்த 12 ஆம் தேதி நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்று, சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது தவெக நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் படி, விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜயிடம் கரூர் கூட்டத்திற்கு கால தாமதமாக வர யார் ஆலோசனை கொடுத்து வழிநடத்தியது என்று கேட்டதாக கூறப்படுகிறது. சுமார் 7 மணி நேரம் நீண்ட விசாரணைக்கு பிறகு மறுநாள் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தினர். அப்போது நடிகர் விஜய் பொங்கல் பண்டிகை வருவதால் 19 ஆம் தேதி நேரில் ஆஜராவதாக கடிதம் மூலம் உறுதி அளித்தார்.
அதன்படி சிபிஐ அதிகாரிகள் விஜய்யை 19 ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜராக அனுமதி வழங்கினர். இதற்கிடையே நடிகரான விஜய்க்கு கட்சி கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு எந்த வகையில் பணம் வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி குறித்து தனியாக விசாரணை நடத்தினர்.

வழக்கமாக, கட்சி சார்ந்த நிகழ்வுகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு விஜய் வெள்ளை சட்டை, காக்கி நிற பேன்ட் அணிந்து செல்வார். கடந்த 12 ஆம் தேதி நடந்த சிபிஐ விசாரணைக்கு கருப்பு நிற சட்டை, பேன்ட் அணிந்து வந்திருந்தார். சென்ற முறை கருப்பு சட்டை & பேன்ட் அணிந்து சிபிஐ விசாரணைக்கு விஜய் சென்றதால், விஜய் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டார் என குறியீடாகச் சொல்வதாக தவெகவினர் கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்று வெள்ளை சட்டை அணிந்து சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. வெள்ளை சட்டை அணிந்து வந்திருப்பதால், பாஜகவிடம் சமாதானமாக போக முடிவெடுத்து விட்டாரா விஜய் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு நாளில் 7 மணி நேரம் உட்கார வைத்து விசாரணை நடத்தியதுமே விஜய் மிரண்டு போய் பயந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

என்.டி.ஏ கூட்டணியில் இணைய தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும், அதன் காரணமாகவே விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு சென்சார் வழங்கப்படாமல் சிக்கல் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தவெகவினர் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் சிபிஐ விசாரணைக்கு விஜய் வெள்ளைச் சட்டையுடன் சென்றிருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications