டெல்லி புதிய முதல்வர் யார்? அமைச்சரவையில் யாருக்கு யார் இடம்? மண்டை காயும் பாஜக- பிப்.19-ல் முடிவு?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து தீவிரமாக ஆலோசனைகளை நடத்தி வருகிறது. டெல்லியின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் பிப்ரவரி 19-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. டெல்லி புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை பிப்ரவரி 20-ந் தேதி பதவியேற்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது.

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 8-ந் தேதி அறிவிக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக புதிய முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் பாஜக மேலிடம் தடுமாறி வருகிறது. முதல்வர் பதவிக்கு பலரும் போட்டி போடுவதால் யாரை முதல்வராக்குவது என விழித்துக் கொண்டிருக்கிறது பாஜக.
இந்த பின்னணியில் டெல்லி முதல்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பிப்ரவரி 19-ந் தேதிதான் டெல்லி முதல்வர் யார் என அறிவிக்க இருக்கிறது பாஜக என்கின்றன அரசியல் வட்டாரங்கள். மேலும் 48 பேரில் அமைச்சரவையில் இடம் பெறும் 15 பேர் குறித்தும் இறுதி முடிவெடுக்கப்பட்டு பிப்ரவரி 20-ந் தேதி டெல்லியில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் முன்னாள் முதல்வரான சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா. டெல்லியின் முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புதுடெல்லி தொகுதியில் வென்றவர்கள்தான் என்பதால் பர்வேஷ் வர்மாவுக்கே அதிக வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications