மத்தியில் யார் ஆட்சி.. "முடிவு செய்வதே" டெல்லியின் 7 தொகுதிகள்தான்.. 1967 முதல் நடப்பது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 7 தொகுதிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் டெல்லி, மத்தியில் யார் ஆள்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. 1967 முதல் தேர்தல்களில் மத்தியில் ஆட்சிக்கான பாதையைக் காட்டி வரும் டெல்லி, இந்த முறையும் அதை உறுதி செய்யுமா? பார்க்கலாம்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று ஆறாம் கட்டத் தேர்தல் 58 லோக்சபா தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

Who will rule after lok sabha election Delhi decides the ruler of india

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. டெல்லியில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு வேகமாக நடந்து வருகிறது.
தீர்மானிக்கும் டெல்லி: மத்தியில் ஆட்சி அமைக்க 272க்கும் மேற்பட்ட சீட்களில் வென்றாக வேண்டும். உத்தர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பெரிய மாநிலங்களில் கட்சிகள் பெறும் வெற்றி, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பை எளிதாக்குகிறது. அதேசமயம், டெல்லியில் உள்ள வெறும் 7 லோக்சபா சீட்டுகளும், மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கின்றன என்பதுதான் இதுவரையிலான தேர்தல் வரலாறு.

அதாவது, தலைநகர் டெல்லியில், அதிக இடங்களைக் கைப்பற்றும் அரசியல் கட்சியே, மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது காலம் காலமாக லோக்சபா தேர்தலில் நடைபெற்று வரும் காட்சி. கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் இதுவே நடந்தது. டெல்லியின் 7 லோக்சபா தொகுதிகளையும் அலேக்காக கைப்பற்றிய பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

2019ல் தான் இந்த நிலையா என்றால், அதுதான் இல்லை. 1967 முதலே இதுதான் நிலை. அதாவது, 57 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பதில் டெல்லி வாக்காளர்கள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர். டெல்லியில் உள்ள 7 சீட்களில் அதிக தொகுதிகளில் வெல்லும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்திருப்பது யதேச்சையானது அல்ல. நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக டெல்லி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே தொடர் தேர்தல் வரலாறுகள் உணர்த்தும் உண்மை.

Who will rule after lok sabha election Delhi decides the ruler of india

2019, 2014 ரிசல்ட்: எனவே தான் 7 சீட்கள் மட்டுமே கொண்ட டெல்லியின் முடிவுகள் முக்கியமாக உற்று நோக்கப்படுகின்றன. இந்த முறையும் டெல்லியைக் கைப்பற்றும் கட்சி, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுமா என நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் மொத்தமாக அள்ளியது பாஜக. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 303 தொகுதிகளில் வென்று மத்தியில் ஆட்சியை அமைத்தார் நரேந்திர மோடி.

2014 லோக்சபா தேர்தலிலும் பாஜக டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி தம் வசம் இருந்த 7 தொகுதிகளையும் இழந்ததோடு, மத்தியில் ஆட்சியையும் பறி கொடுத்தது.

காங்கிரஸ்: 2009 லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. அந்த தேர்தலில் முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.

2004 லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. பாஜக 1 தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

அள்ளிய பாஜக: வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்ந்த பிறகு மீண்டும் 1999ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக எல்லா இடங்களிலும் தோற்றது. அந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 182 சீட்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது பாஜக. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

1998 லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 182 சீட்களில் வென்றது பாஜக. காங்கிரஸ் 141 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 161 சீட்களில் வென்றது பாஜக. காங்கிரஸ் கட்சியின் சீட் எண்ணிக்கை பெரிய அடியை வாங்கியது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து தேவ கவுடா, ஐ.கே குஜ்ரால் தலைமையில் சிறிது காலம் ஆட்சி நடைபெற்றது.

1991ல் நடந்த கதை: 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றது. எனினும் அந்த தேர்தலில் நாடு முழுவதும் 244 சீட்களில் வென்றது காங்கிரஸ் கட்சி. பெரும்பான்மையை பிடிக்க முடியவில்லை. பாஜக 120 இடங்களில் வென்று நல்ல வளர்ச்சியைக் காட்டியது.

டெல்லியில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்காவிட்டாலும், மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், 1991ல் டெல்லியை இழந்த காங்கிரஸ், பெரும் வீழ்ச்சியை சந்தித்தது உண்மை. 1952 முதல் நடைபெற்று வந்த தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாமல் போன தேர்தல் 1991 தான். டெல்லியை இழந்த காங்கிரஸ், மெஜாரிட்டியையும் இழந்தது. ஆக, டெல்லி தன் முகத்தை தெளிவாகக் காட்டியுள்ளது.

1991 தேர்தல் சில கட்டங்கள் முடிந்திருந்த நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நடந்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு தென்னிந்தியாவில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தது. ராஜீவ் படுகொலை சம்பவம் நடைபெறவில்லை என்றால், டெல்லியில் அதிக இடங்களை வென்ற பாஜக நாடு முழுவதும் அதிக சீட்களை வென்றிருந்தாலும் ஆச்சர்யமில்லை.

1989 தேர்தல் நிலை: 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றது. வி.பி சிங்கின் ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் வென்றது. அந்த தேர்தலில் நாடு முழுவதும் 197 சீட்களில் வென்றது காங்கிரஸ் கட்சி. பெரும்பான்மையை பிடிக்க முடியவில்லை.

அதே சமயம் பாஜக, நாடு முழுவதும் 85 இடங்களில் வென்றது. அதுவரை 2 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. டெல்லியில் 1 தொகுதி உட்பட நாடு முழுவதும் 143 இடங்களில் வெற்றி பெற்ற வி.பி சிங் பிரதமர் ஆனார்.

1984ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. அந்த தேர்தலில் நாடு முழுவதும் 414 சீட்களைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

1980ல் டெல்லியில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வென்றது. அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். டெல்லியில் அதிக சீட்களை வென்ற காங்கிரஸ் கட்சியே இந்தியாவை ஆட்சி செய்தது.

புரட்டி எடுத்த டெல்லி: 1977ல் காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. தனி சின்னம் கூட இல்லாத ஜனதா கட்சி வேட்பாளர்கள் டெல்லியின் 7 தொகுதிகளையும் வென்றனர். ஒட்டுமொத்தமாக 295 இடங்களைப் பிடித்து ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடுத்த 3 ஆண்டுகளிலே அதில் 6 தொகுதிகளை காங்கிரஸ் அங்கு வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.

1971ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி டெல்லியில் க்ளீன் ஸ்வீப் செய்தது. அதேபோல ஒட்டுமொத்தமாக 350+ சீட்களை பிடித்து மெஜாரிட்டி காங்கிரஸ் அரசு அமைந்தது.

1967ல் டெல்லியின் 1 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. மற்ற 6 தொகுதிகளிலும் பாரதிய ஜன சங்கம் வென்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தாலும், அது பலவீனமான பெரும்பான்மையாகவே இருந்தது. டெல்லியில் வெற்றியை இழந்த காங்கிரஸ் கட்சி, அச்சமயத்தில் ஆட்சி அமைத்தாலும் பலவீனமான மெஜாரிட்டியுடன் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒட்டுமொத்த நாட்டை பிரதிபலிக்கும் டெல்லி: டெல்லியை பொறுத்தவரை எந்தக் கட்சிக்கும் நிலையாக வாக்களிக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருந்ததில்லை. சாதி, மதம் அங்கு பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியது இல்லை. அப்போதைய அரசியல் சூழல்களே டெல்லியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. முந்தைய தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றிய கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் நிலையையும் டெல்லி காட்டியுள்ளது.

மேற்கு வங்கம் போலவோ, தமிழ்நாடு போலவோ, தொடர்ச்சியாக ஒருபக்கம் காற்று வீசும் மாநிலமாக டெல்லி இருக்கவில்லை. காங்கிரஸ், பாஜக மட்டுமல்லாது, ஜனதா கட்சிக்கும், ஆம் ஆத்மிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது டெல்லி.

கடந்த சட்டசபை தேர்தல்களில் 70ல் 67 தொகுதிகளை வென்றது ஆம் ஆத்மி. அடுத்த முறை 62 தொகுதிகளை வென்றது. அதேசமயம், லோக்சபா தேர்தல்களில் கடந்த 2 முறையுமே ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. ஏன், இரண்டாம் இடம் கூட பெரும்பாலான தொகுதிகளில் வர முடியவில்லை.

ஒரே பேட்டர்ன் கிடையாது: ஆக, டெல்லி, எப்போதும் ஒரே பேட்டர்னை பின்பற்றுவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். டெல்லி, பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வசிக்கும் ஏராளமான மக்களைக் கொண்டது. டெல்லியில் பீகார், பஞ்சாப், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, டெல்லி, அந்த மாநிலங்களில் உள்ள மக்களின் எண்ண ஓட்டத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

தற்போது டெல்லியில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. நாடு முழுவதும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 7 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணியில் போட்டியிடுகிறது. அதில் டெல்லியில் உள்ள 4 தொகுதிகளும் அடக்கம்.

வரலாறு தொடருமா?: டெல்லியை ஆம் ஆத்மி கட்சி எவ்வளவு தீவிரமாக அணுகுகிறது என்பதற்கு, அக்கட்சி அங்கு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே சாட்சி. இத்தனை ஆண்டு காலமாக, டெல்லி, ஒட்டுமொத்த நாட்டின் முகத்தை பிரதிபலித்தே வந்துள்ளது. டெல்லியில் அதிக இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். குறைந்த இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் அல்லது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்திக்கும்.

டெல்லியின் இந்த தேர்தல் வரலாறு இந்த தேர்தலிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். டெல்லியின் 7 தொகுதிகளையும் எந்தக் கட்சி கைப்பற்றப் போகிறது? டெல்லியை கைப்பற்றும் கட்சி, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு தொடருமா என்பதெல்லாம் ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+