அந்த 5 நிமிடம்.. எடப்பாடி வைத்த செக்.. "இது" நடந்தா கேம் ஓவர்.. உச்ச நீதிமன்றத்தில் பதறிய ஓபிஎஸ்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான இடைக்கால தீர்வு ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதிமுகவில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
வழக்கு முடியும் வரை அதிமுகவில் மாற்றங்களை செய்ய கூடாது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு உள்ளது.

பின்னடைவு
இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு இருக்கும் இன்னொரு பின்னடைவு என்றால், தேர்தல் ஆணையமும் இதில் முடிவு எடுக்க மறுக்கிறது. அதாவது அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுகொள்ளவில்லை. அதேபோல் அதிமுகவில் பொதுக்குழு கூடி எடுக்கப்பட்ட முடிவுகளையும் தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு நடப்பதால் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு, எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

கோரிக்கை
இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த வழக்கில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த வழக்கு விசாரணை காரணமாக தேர்தல் ஆணையம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்கவில்லை. அதனால் அதிமுக விதிகளை மாற்ற முடியாமல் கட்சி முடங்கி உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் முடிவுகளை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு போட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம்.

என்ன மனு
ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுத்தாக்கலை உடனே செய்யுங்கள். உங்களுக்கு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கிறோம். அதற்கு எதிர்மனுதாரர்கள் இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதன்படியே எடப்படியும், அதிமுகவில் விதிகளை மாற்றி, பொதுக்குழுவை கூட்டி, பதவிகளில் மாற்றம் செய்து உள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த வழக்கிற்கும் விதி மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்று உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி மனுவில் குறிப்பிட்டார்.

பதில்
இதற்கு ஓ பன்னீர்செல்வம் அனுப்பிய பதிலில், இந்த பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் முன் உச்ச நீதிமன்றம் எப்படி இடைக்கால தீர்வு வழங்க முடியும். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மனுதாரராக இல்லாத போது எப்படி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எடப்பாடி இடைக்கால தீர்வு கோர முடியும். அதிமுக பொதுக்குழு கூடியதே தவறு. அப்படி இருக்கும் போது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்க சொல்லி இடைக்கால நிவாரணம் எப்படி கோரலாம் என்று ஓ பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்தார். இதில்தான் எடப்பாடிக்கு இடைக்கால தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கில் இன்று பதற்றமாக சில கோரிக்கைகளை வைத்தார்.

5 நிமிடம்
இன்று அலுவல் நேரம் முடிந்ததால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. வெறும் 5 நிமிடம் மட்டுமே வழக்கு அமர்வு கூட்டப்பட்டு, பின்னர் உடனே அமர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த இடைப்பட்ட நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த இடைக்கால மனு தவறானது. இந்த மனுவை விசாரிக்க கூடாது என்று பதற்றமாக வாதம் வைத்தது. மேற்கொண்டு வாதம் எதுவும் செய்யாமல் வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் இதில் பதற்றம் அடைய காரணம் உள்ளது. ஒருவேளை இதில் இடைக்கால நிவாரணம் எடப்பாடிக்கு வழங்கப்பட்டு, அதன்பின் அதிமுக பொதுக்குழுவில் நடந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்படுவார். வழக்கு முடியும் வரை அவர் இடைக்கால பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இப்போது சட்டப்படி எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட கூடாது.. தேர்தல் ஆணையம் கட்சி விதிகள் மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள கூடாது என்பதால்தான் இன்று ஓ பன்னீர்செல்வம் இடைக்கால நிவாரணம் கொடுக்க கூடாது என்று தீவிரமாக வாதம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications