அமெரிக்காவை மீறி இந்திரா காந்தி செய்த சம்பவம்! வங்கதேசத்தில் ‛எமர்ஜென்சி’ படத்துக்கு தடை.. பின்னணி
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை கங்னா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தை வங்கதேசத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதுபற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹிந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் இப்போது எம்பியாக உள்ளார். கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்த கங்கனா ரனாவத்துக்கு அந்த கட்சி இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. மாண்டி லோக்சபா தொகுதியில் கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார்.

முன்னதாக நடிகை கங்கனா ரனாவத், மறைந்த முன்னாள் பிரதமரான காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி அமல்படுத்திய ‛எமர்ஜென்சி'யை அடிப்படையாக கொண்ட படத்தில் நடித்தார். அந்த படத்துக்கு ‛எமர்ஜென்சி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வரும் 17 ம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படம் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் எமர்ஜென்சி திரைப்படத்தை வங்கதேசத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் வங்கதேசத்தில் எமர்ஜென்சி திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அதாவது தற்போது நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு என்பது இல்லை. இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ‛எமர்ஜென்சி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் காரணமாக உள்ளன. அதாவது தற்போதைய வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு தான் வங்கதேசம் 1971ம் ஆண்டு தனிநாடாக உருவானது.
இதற்கு நம் நாட்டு ராணுவ வீரர்கள் தான் முக்கிய காரணம். நம் நாட்டு ராணுவ வீரர்கள் தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக போரிட்டனர். இந்த சமயத்தில் நம் நாட்டில் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவரது உத்தரவின்பேரில் தான் நம் நாட்டு ராணுவம் அந்த பிரச்சனையில் தலையிட்டது. அதோடு பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி கிழக்கு பாகிஸ்தான் பகுதியை வங்கதேசம் எனும் தனி நாடாக உருவாக்கியது.
முன்னதாக இந்த விவகாரத்தில் இந்தியாவும், இந்திரா காந்தியும் தலையிடக்கூடாது என்று அமெரிக்கா கூறியது. ஆனால் அதனை மீறி இந்திரா காந்தி நம் நாட்டு ராணுவத்தை களமிறக்கி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தார். அதாவது கிழக்கு பாகிஸ்தானில் இருந்து நம்நாட்டுக்கு ஏராளமானவர்கள் அகதிகளாக வருவதை விட அவர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நம் நாட்டை களமிறக்கி போர் புரிந்து வெற்றி கண்டார் இந்திரா காந்தி.
அதோடு அமெரிக்காவின் பேச்சை கேட்காததால் அந்த நாடு நம்மை மிரட்ட தொடங்கியது. வங்காளவிரிகுடாவில் விமான அழிப்பு கப்பல், அணுஆயுதம் ஏந்திய நீர்மூழ்கி கப்பல் உள்பட பிற போர்கப்பல்களை அமெரிக்கா நம் நாட்டுக்கு எதிராக நிறுத்தியது. ஆனால் இந்திரா காந்தி அரசு நம் நாட்டின் நண்பரான ரஷ்யா (அப்போது சோவியத் யூனியனாக இருந்தது) உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தியது.
இதனால் இந்திரா காந்தியை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மான் துர்கா என்று அழைத்தார். 1971ல் வங்கதேச சுதந்திர போரில் இந்திய ராணுவம், இந்திரா காந்தியின் நடவடிக்கையை இந்த திரைப்படம் எடுத்து காட்டுவதோடு, அதன்பிறகு நம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ‛எமர்ஜென்சி' சூழலையும் திரைப்படம் விளக்குகிறது. இதனால் தற்போது அங்கு படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ழங்கப்பட்ட ஆதரவையும் 'அவசரநிலை' எடுத்துக்காட்டுகிறது.
அந்த வகையில் ‛எமர்ஜென்சி' திரைப்படத்தில் வங்கதேசம் உருவாகும்போது இந்திரா காந்தி அரசு மற்றும் நம் நாட்டு ராணுவத்தின் பங்கு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இருநாடுகள் இடையே மோதல் உள்ள நிலையில் இந்த திரைப்படம் அங்கு வெளியாகும்போது பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதால் தடை என்பது விதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி திரைப்படத்துடன் தொடர்புடையவர் கூறுகையில், ‛‛எமர்ஜென்சி திரைப்படத்தை வங்கதேசத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இருநாடுகள் இடையேயான உறவு தான் காரணம். அதாவது திரைப்படத்தில் கூறும் கருத்துகளை விட இருநாடுகள் இடையேயான அரசியல் பிரச்சனையால் தான் இந்த படத்துக்கு தடை என்பது விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications