"விலைமாது போல உணர வைத்தனர்!" உலக அழகி போட்டியில் நடக்கும் கேவலம்.. விலகிய பிரிட்டன் அழகி புகார்
டெல்லி: இன்னும் இரண்டு நாட்களில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது மிஸ் இங்கிலாந்து மில்லா-மை மேகி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னை ஒரு விலைமாது போல உணர வைத்தாக மில்லா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்குப் போட்டியை நடத்துவோர் விளக்கமளித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிஸ் வோர்ல்ட் எனப்படும் உலக அழகி போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பார்கள். இந்தாண்டு மிஸ் வேர்ல்ட் 2025 தெலுங்கானா தலைநகர ஹைதராபாத்தில் நடக்கிறது. 1996, 2004க்கு பிறகு மூன்றாவது முறையாக உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அழகி
இதன் இறுதிப் போட்டி நாளை மறுநாள், அதாவது மே 31ம் தேதி நடைபெறுகிறது. போட்டி நடக்க இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலக அழகி போட்டியில் இருந்து மிஸ் இங்கிலாந்து மில்லா-மை மேகி விலகியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே போட்டியில் இருந்து விலகிவிட்டார். உலக அழகி போட்டியில் பங்கேற்க மே 7ம் தேதி இந்தியா வந்த அவர், மே 16ம் தேதியே கிளம்பிவிட்டார். போட்டி ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கை மீது சில காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் விலகியிருக்கிறார்.
இருப்பினும், முதலில் அவர் போட்டியில் இருந்து விலகிய போது என்ன காரணம் என்பது தெரிய வரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகப் போட்டியில் இருந்து விலகுவதாக மட்டுமே சொல்லி அவர் விலகியிருந்தார். இந்தச் சூழலில் அவர் பிரிட்டன் நாட்டின் தி சன் பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் தான் அவர் உலக அழகி போட்டிகளை நடத்துவோர் மீது பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். போட்டியாளர்களைக் கண்காட்சிப் பொருட்கள் போல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்துவதாக மில்லா வெளிப்படையாகவே குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.
பகீர் குற்றச்சாட்டு
போட்டியில் பங்கேற்ற அழகிகளை ஏதோ விற்பனைக்கு வந்த பொருட்களைப் போல நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 6 விருந்தினர்களைக் கொண்ட மேஜையில் இரு அழகிகளை உட்கார வைத்து நாள் முழுக்க அவர்களுடன் நேரம் செலவிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும் போட்டியை ஸ்பான்சர் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை செய்ய சொல்வதாகவும் மில்லா சாடியுள்ளார்.
இது மிகவும் தவறு என நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொழுதுபோக்கிற்காகத் தான் போட்டியில் பங்கேற்கவில்லை என்றும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி வந்த தனக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகத் தெரிவித்துள்ளார். மிஸ் வேர்ல்ட் பட்டத்திற்கு எனத் தனி மதிப்புகள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும், அது காலாவதியாகிக் கடந்த காலத்திலேயே சிக்கிக் கொண்டதாகவும் சாடியுள்ளார்.
விலைமாது போல உணர வைத்தனர்
மேலும், உலக அழகி போட்டி என்பது ஒரு போட்டியாளரின் புத்திசாலித்தனத்தையும் அளவிடும் ஒரு போட்டியை இருக்கும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரியாலிட்டி அதற்கு நேர்மாறாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் தன்னை ஒரு குரங்கு போல நடத்தியதாகவும் போட்டியில் பங்கேற்பது சங்கடமாக இருந்ததாலேயே உடனடியாக வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாகப் போட்டி ஏற்பாட்டாளர்களின் நடத்தை தன்னை ஒரு விலைமாது போல உணர வைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் விளக்கம்
இருப்பினும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மிஸ் வோர்ட் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மில்லா தனிப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டியே போட்டியில் இருந்து விலகியதாகவும் தங்களிடம் இதுபோல எந்தவொரு புகாரையும் அவர் எடுத்து வரவில்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி விலகியவர் திடீரென ஏன் இதுபோல பேசுகிறார் எனப் புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். உலக அழகி போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த புகாரும் விளக்கமும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications