32 வருடம் மனைவியை "சுற்றவிட்ட" கணவன்.. கோர்ட்டில் நீதிபதி தந்த தீர்ப்பை பாருங்க.. தலையில் "குட்டு"
டெல்லி: தன் கணவருக்கு வழங்கப்பட்ட விவாகரத்தை எதிர்த்து, 32 வருடமாக பெண் ஒருவர் போராடி வருகிறார்.. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கனிவுடன் பரிசீலித்திருக்கிறார்கள். அத்துடன், பெண்ணின் கணவருக்கு கறார் உத்தரவுகளையும் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த தம்பதியினர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். கடந்த 1991ல் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. அடுத்த வருடமே ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

ஆனால், அதற்கு பிறகு, மனைவியை விட்டுவிட்டு, கணவர் பிரிந்து சென்றுவிட்டார்..
ஆனாலும், கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் மனைவி காத்திருக்க துவங்கினார்.. கணவரின் வீட்டிலேயே, தன்னுடைய மாமியார், குழந்தையுடன் இந்த பெண் இப்போதும் வசித்தும் வருகிறார்.
கணவர் பிடிவாதம்: ஆனால், வீட்டை விட்டு வெளியேறிய கணவனோ, தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி, கோர்ட்டுக்கும் போய்விட்டார்.. குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கணவர் கேட்டுக் கொண்டபடியே கடந்த 2006ல் விவாகரத்தும் வழங்கப்பட்டுவிட்டது.
இதனால் அதிர்ந்து போன மனைவி, இந்த விவாகரத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, விவகாரத்தை பரிசீலனை செய்யும்படி, குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது.
குடும்ப நல நீதிமன்றம்: இப்படி 3 முறை குடும்ப நல நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், இதை ஒவ்வொரு முறையும் விசாரித்த ஹைகோர்ட், குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.. ஒருமுறை நிவாரணமாக, குடும்ப நல நீதிமன்றம் நிர்ணயித்த, 25 லட்சம் ரூபாயை, 20 லட்சம் ரூபாயாக மாற்றியது... இதையும் எதிர்த்து அந்தப்பெண், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிமன்ற அமர்வு சொன்னதாவது:
தம்பதியினர்: "இவர்களுக்கு கல்யாணமாகி ஒரு வருடம் மட்டுமே, தம்பதியினர் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.. அதாவது, 32 வருடங்களாகவே 2 பேரும் பிரிந்தே வாழ்கிறார்கள்.. எப்படியும் இவர்களுக்குள் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெரியவில்லை.. அதனால், விவாகரத்து வழங்கியதை உறுதி செய்கிறோம்.
அதே சமயம், இந்த வழக்கில், நீதித்துறை நடைமுறைகளால் இந்த பெண்ணுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது... குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை.. கணவருக்கு சாதகமாகவே 3 முறை தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது.. அந்த கணவனின் அம்மாவும், இந்தப்பெண்ணுடன் வசித்து வருகிறார்.
யார் மீது தவறு: தன்னுடைய மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அந்த தாய் வலியுறுத்தியுள்ளார். இதிலிருந்து இந்த விஷயத்தில், தவறு எந்தப் பக்கம் உள்ளது என்பதும் தெளிவாகிறது. ஆனால், குடும்ப நல நீதிமன்றம் இதையெல்லாம் ஏன் கவனிக்கவில்லை? தனக்கு பிறந்த மகனின் கல்வி உள்ளிட்ட எதற்குமே எந்த செலவையும் அந்த நபர் செய்யவில்லை.. குடும்ப நல நீதிமன்றம் அதைப்பற்றியும் கவலையும் படவில்லை.
எனவே, விவாகரத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில், அந்தப்பெண்ணுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அவர் வழங்க வேண்டும். அதுவும், கடந்த 2006ல் இருந்து 7 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்தப்பெண் தற்போது வசித்து வரும் வீட்டின் உரிமையையும் அவருக்கே வழங்க வேண்டும்.. அதில், கணவர் எந்த உரிமையும் கோர முடியாது.
விவாகரத்து செல்லாது: அதுபோல, கணவருக்கு வேறு ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அதை வேறு யாருக்காவது மாற்றியிருந்தாலும், அதில், அவருடைய மகனுக்கும் உரிமை உள்ளது... மேற்கூறிய இழப்பீட்டு தொகையை, அடுத்த 3 மாதங்களுக்குள் வழங்காவிட்டால், இந்த விவாகரத்து செல்லாது... அவர் மீது சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை, குடும்ப நல நீதிமன்றம் எடுக்க வேண்டும்" என்று அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications