நாட்டில் விரைவில் அடுத்த அலை? ஐரோப்பாவில் புதிய உச்சத்தில் கொரோனா கேஸ்கள்.. இந்தியாவுக்கான வார்னிங்?
டெல்லி: ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அதேநிலை மீண்டும் இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் வைரஸ் பாதிப்பு endemic நிலையை அடைந்துவிட்டதாகவே பலரும் கருதினர்.
இருப்பினும், தற்போது ஐரோப்பாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கில் மீண்டும் கூடுதல் தளர்வுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

புதிய ஆய்வு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வரைஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தீவிரமாக முன்னெடுக்கப்படும் வேக்சின் பணிகளாலேயே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. இதனால் தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'ப்ராஜெக்ட்: ஜீவன் ரக்ஷா' என்ற ஆய்வு செப்டம்பருடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீட்டுக் கோரிக்கைகள் 72 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறையும் கொரோனா
கடந்த செப்டம்பரில், நாடு முழுவதும் 1.55 லட்சம் கோரிக்கைகள் வந்த நிலையில் அக்டோபரில் அது 41 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. "அக்டோபரில் பண்டிகைக் காலம் இருந்தது. மேலும், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது அதைத்தாண்டி கொரோனா பாதிப்பால் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது கணிசமாகக் குறைந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காப்பீட்டு கோரிக்கைகள்
அதேபோல கொரோனா உயிரிழப்பிற்கான மருத்துவக் காப்பீட்டுக் கோரிக்கையும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது (4,074) அக்டோபர் மாதம் (1,688) 60 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இந்தியாவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3.5 லட்சம் பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக ப்ராக்ஸிமா கன்சல்டிங்கால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகளவில் கணிக்கப்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் வெறும் 2.3% மட்டுமே ஆகும்.

538 நாட்களில் குறைவு
இந்தியாவில் கடந்த திங்கள்கிழமை 8488 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 538 நாட்களில் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் இதுதான் மிகக் குறைவு. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.18 லட்சமாகக் குறைந்துள்ளது. நேற்று மட்டும் 249 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 4,65,911ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலை
இந்தியாவில் கடந்த 45 நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு 20,000க்கு கீழாக உள்ளது. அதேபோல கடந்த 148 நாட்களுக்குத் தினசரி பாதிப்பு 50,000க்கு கீழ் உள்ளது. மொத்த பாதிப்பில் ஆக்டிவ் கேஸ்கள் 0.34 சதவீதமாகக் குறைந்துள்ளது.. மார்ச் 2020க்குப் பிறகு வைரஸ் பாதிப்பு இந்தளவு குறைவது இதுவே முதல்முறையாகும், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 98.31 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு இது தான் மிக அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் பாசிட்டிவ் விகிதம் 0.93%ஆக உள்ளது. கடந்த 59 நாட்களாகவே இந்தியாவில் பாசிட்டிவ் விகிதம் 2% கீழாகவே உள்ளது.

ஏற்பட வாய்ப்பில்லை
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதேபோல வேக்சின் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதால், தற்போது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கணிக்கப்படுகிறது. அதேபோல வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்தாலும் கூட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கவும் அரசு தயாராக உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications