வாரம் தலா 3 நாள்.. 2 திருமணத்தால் வந்த குழப்பம்.. சாப்ட்வேர் என்ஜினீயரை பங்குபோட்ட மனைவிகள்!வியப்பு
முதல் மனைவியுடன் வாரத்தில் முதல் 3 நாட்களும், 2வது மனைவியுடன் அடுத்த 3 நாட்கள் வசிக்கவும், ஞாயிற்றுக்கிழமை சாப்ட்வேர் என்ஜினீயர் தனது விருப்பப்படி இருக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
டெல்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த 28 வயது நிரம்பிய சாப்ட்வேர் என்ஜினீயர் 2 திருமணம் செய்த நிலையில் இரு மனைவிகளுக்கும் குழந்தை பிறந்தது. 2வது திருமணம் பற்றி அறிந்த முதல் மனைவி குடும்பநல நீதிமன்றத்துக்கு சென்றார். இந்நிலையில் தான் சாப்ட்வேர் என்ஜினீயர் 2 மனைவிகளுடன் சரிசமமாக குடும்பம் நடத்துவதாக ஒப்புக்கொண்டு விசித்திரமான ஒப்பந்தம் செய்துள்ள தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2வது திருமணம் செய்வது என்பது இந்து திருமண சட்டத்தின்படி குற்றமாகும். இருப்பினும் சிலர் ரகசியமாக 2வது திருமணம் செய்து கொள்வதும், அதன்பிறகு பிரச்சனையில் சிக்கி கொள்வதும் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் 2 திருமணம் செய்ததால் புதிய பிரச்சனையில் சிக்கினார். தற்போது அந்த பிரச்சனையில் இருந்து அவர் வித்தியாசமான முறையில் விடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:

28 வயது என்ஜினீயர்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் 28 வயது சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் ஹரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் 2018 மே மாதம் திருமணம் நடந்தது. 26 வயது நிரம்பிய இளம்பெண்ணை அவர் கரம் பிடித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கேயே வசித்து வந்தனர். இந்நிலையில் தான் 2020ல் கொரோனா பரவ தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த தம்பதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு திரும்பினர். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவரான சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் இருந்தே பணி செய்து வந்தார்.

மனைவிக்கு சந்தேகம்
அதன்பிறகு சில நாட்களிலே அவர் அலுவலகத்தில் அழைக்கிறார்கள் எனக்கூறி மனைவியை விட்டுவிட்டு குர்கிராம் சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. வீட்டுக்கு வரும்படி மனைவி கேட்கும்போதெல்லாம் அவர் கொரோனா பரவலை காரணம் காட்டி வீட்டுக்கு வராமல் இருந்தார். கொரோனா பரவல் குறைந்தாலும் கூட அவர் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்தார். இதனால் மனைவிக்கு சந்தேகம் எழுந்தது.

2வது திருமணம் செய்த என்ஜினீயர்
இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் 2021ல் குவாலியரில் இருந்து குர்கிராம் புறப்பட்டு சென்றார். அப்போது அவரது கணவரான சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னுடன் பணியாற்றிய இன்னொரு பெண்ணை 2வது திருமணம் செய்து ரகசியமாக குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் 2வது திருமணம் செய்ததால் தான் குவாலியருக்கு வந்து தன்னையும் தனது குழந்தையையும் அவர் பார்க்காமல் இருந்ததை புரிந்து கொண்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து முதல் மனைவி சார்பில் குவாலியர் குடும்பநல நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் இருக்கும் நிலையில் சாப்ட்வேர் என்ஜினீயருக்கும், அவரது 2வது மனைவிக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தான் குவாலியர் நீதிமன்றம் சார்பில் பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கான ஆலோசகர் நியமிக்கப்பட்டார். ஆலோசகர் ஹரிஷ் திவான் செயல்பட்டு வந்தார்.

முடிவுக்கு வந்த 3 பேர்
இதையடுத்து வழக்கில் தொடர்புடைய 3 பேரிடமும் ஆலோசகர் ஹரீஷ் திவான் பேசினார். சாதக, பாதகங்களை எடுத்து கூறினார். இந்து திருமண சட்டத்தின்படி முதல் மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதில் வழக்குப்பதிவு செய்தால் தண்டனை அதிகமாக கிடைக்கும் என எடுத்து கூறினார். இதையடுத்து சாப்ட்வேர் என்ஜினீயர் தனது முதல் மனைவி, 2வது மனைவியுடன் பேசினார். அப்போது அவர்கள் 3 பேரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

தலா 3 நாட்கள் மனைவியுடன்
அதன்படி சாப்ட்வேர் என்ஜினீயர் தனது முதல் மனைவியுடன் வாரத்தில் திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரையும், 2வது மனைவியுடன் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையும் வசிக்கவும், ஞாயிற்றுக்கிழமை அவரது விருப்பப்படி இருக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் சாப்ட்வேர் என்ஜினீயர் வாங்கும் ரூ.1.5 லட்சத்தை இருமனைவிக்கும் சரிசமமாக வழங்கவும், கணவர் பெயரில் இருக்கும் 2 பிளாட்டுகளை இருமனைவிகளுக்கும் பிரித்து வழங்கவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் முதல் மனைவி நீதிமன்றத்தில் அணுகலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications