Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிஸை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யூடியூப்பில் பிரபலமாக இருப்பவர் மாரிதாஸ். வலதுசாரி ஆதரவாளரான இவர் தனது சேனல்களில் தொடர்ச்சியாக ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்த போதே, ஆளும் தரப்புக்கு எதிராக வீடியோ வெளியிட்டவர் மாரிதாஸ். அப்போது இவர் கைதும் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்து மாரிதாஸ் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தவெக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை வீடியோ வெளியிட்டு வந்தார். இதற்கிடையே சமீபத்தில் இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு இன்று காலை அதிரடியாக சைபர் கிரைம் போலீசார் விரைந்தனர்.. தனது வீட்டிற்கு போலீசார் வந்துள்ளதை மாரிதாஸே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். ஜனநாயகம் மற்றும் கருத்துரிமை நசுக்கப்படுவதாகச் சாடினார்.
இதற்கிடையே மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சூழலில் தான் இரவு நேரத்தில் மாரிதாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவரை போலீசார் ஆஜர்படுத்தப் போது, விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கினார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸ் விடுவிக்கப்பட்டார். ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிதாஸுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications