ஒவ்வொரு டெலிவரிக்கும் ரூ.150 "போனஸ்.." வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்க ஸ்விக்கி, ஜொமாட்டோ அதிரடி
டெல்லி: ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று மாலைக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும் நிலையில், டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தால் டெலிவரி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே போராட்டத்தைச் சமாளிக்க டெலிவரி ஊழியர்களுக்கு இன்று கூடுதலாக ஊக்கத் தொகையை வழங்க டெலிவரி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவில் டெலிவரி சேவை என்பது பெரிய பிஸ்னஸாக மாறியுள்ளது. உணவு டெலிவரி மற்றும் இன்ஸ்டன்ட் டெலிவரி இந்தியாவில் மிகப் பெரிய சந்தையாக மாறியுள்ளது. பல கோடி ஊழியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். இதற்கிடையே கடந்த சில காலமாகவே தங்களின் ஊதியம் குறைந்து வருவதாக டெலிவரி ஊழியர்கள் புகாரளித்து வருகிறார்கள்.

போராட்டம்
மேலும், தன்னிச்சையாக வேலையைவிட்டு நீக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகச் சாடுகிறார்கள். இதை வலியுறுத்தி அவர்கள் அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே இன்றிரவு புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தெலங்கானா கிக் பணியாளர் சங்கம் (TGPWU) மற்றும் இந்திய ஆப் அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு (IFAT) ஆகியவை இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பல லட்சம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் இதனால் டெலிவரி சேவை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. கூடுதல் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிச்சூழல் ஆகியவையே முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
கூடுதல் போனஸ்
இந்த போராட்டத்தால் பல முக்கிய நகரங்களில் டெலவரி சேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவாகப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சமயத்திலேயே டெலிவரி தேவை உச்சத்தில் இருக்கும். இதற்கிடையே போராட்டத்தைச் சமாளிக்கவும் டெலிவரி சிக்கலின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஜொமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்இட், இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஊக்கத் தொகையை இன்று உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.150
குறிப்பாக ஜொமேட்டோ நிறுவனம் இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான பீக் ஹவரில் ஒரு ஆர்டருக்கு ₹120 முதல் ₹150 வரை டெலிவரி ஊழியர்களுக்குக் கொடுக்க முன்வந்துள்ளது. மேலும், இன்று நாள் முழுவதும் டெலிவரி செய்பவர்களுக்கு ₹3,000 வரை வருவாய் ஈட்டவும் முடியும் என நிறுவனம் உறுதியளித்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். ஆர்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தத் தொகையைச் சம்பாதிக்க முடியுமாம்.
ஆர்டர் மறுப்புகள் மற்றும் ரத்து செய்வதற்கான அபராதங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இது போராட்டத்தை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை இல்லையாம். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம் என்றே அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்பெஷல் போனஸ்
ஸ்விக்கி நிறுவனமும் தனது ஊழியர்களுக்குச் சலுகையை அறிவித்துள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ₹10,000 வரை வருவாய் ஈட்ட முடியும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ஆண்டின் அதிகபட்ச ஆர்டர்கள் குவியும் நேரத்தில் ஓட்டுநர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். குறிப்பாக இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான ஆறு மணி ஆர்டர்கள் பல மடங்கு அதிகரிக்கும் நிலையில், இந்த நேரத்தில் வேலை செய்வோர் ₹2,000 வரை வருவாய் ஈட்ட முடியும் என விளம்பரப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications