ஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்
தருமபுரி: ஒகேனக்கல் காட்டுக்குள் சுற்றுலா சென்ற ஜோடியை மர்ம நபர்கள் வழிமறித்துடன், இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டு அவருடன் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தருமபரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மே தினத்தை முன்னிட்டு இன்று ஒகேனக்கலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் சருகை அருகே பாலு என்பவரின் மகன் முனுசாமி (25), ஈரோடு மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த லாவண்யா வயது 15. (சிறுமியின் உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆகிய இருவரும் ஒகேனக்கல் வந்துள்ளனர்.
ஒகேனக்கல்லில் அனைத்து இடங்களையும் சுற்றிபார்த்துவிட்டு வீடு திரும்பும் போது, ஒகேனக்கல் அருகே உள்ள பன்னப்பட்டி வனப்பகுதியிக்குள் சென்று இந்த ஜோடியினர் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

ஜோடிக்கு மிரட்டல்
இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இவர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை கண்ட உடன், இந்த ஜோடியின் அருகே வந்து அமர்ந்தனர்.இவரும் எழுந்து செல்லலாம் என்று நினைத்த போது, அந்த மர்ம நபர்கள், உட்காருங்கள் என மிரட்டியுள்ளனர். மர்ம நபர்களில் ஒருவன், நாட்டுத்துப்பாக்கியை எடுத்து காட்டி சுடப்போவதாக மிரட்டி உள்ளான்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முனுசாமி, சுட்டுவிட வேண்டாம் என கதறி உள்ளார்.

காதலன் கொலை
ஆனால் மர்ம நபர்கள், முனுசாமியை சுட்டுக்கொன்றுவிட்டு, லாவண்யாவை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சிறுமி கூச்சல் போட்டபடி தப்பி ஓடிவந்துள்ளார். இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள், ஒடி வந்து பார்த்த போது முனுசாமி இறந்துகிடந்துள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

சிறுமியிடம் விசாரணை
இதையடுத்து சுற்றுலா பயணிகள் உடனடியாக ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பலாத்கார முயற்சியில் இருந்து தப்பிய சிறுமியிடம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதற்றம்
ஒகேனக்கல் சுற்றுலா சென்ற இளைஞரை கொன்றுவிட்டு சிறுமியை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் ஒகேனக்கல் உள்பட எந்த சுற்றலா தளங்களுக்கு செல்லும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதே இச்சம்வம் உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications