திண்டுக்கல்லில் அடிக்கடி பயங்கர சப்தத்துடன் பறக்கும் விமானம்- எத்தனை வருஷமானாலும் பதிலே கிடைக்கலையே
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி பயங்கர சப்தத்துடன் விமானம் பறப்பது எதற்காக என்பதற்கான பதில் கிடைக்காமல் பொதுமக்கள் விக்கித்துப் போயுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கும் விமானங்களுக்கும் தொடர்பே இல்லை. திண்டுக்கல் மாவட்ட வான்பறப்பில் எப்போதோ ஒரு முறை விமானம் பறப்பதுதான் வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பயங்கர இரைச்சலுடன் அடிக்கடி விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கர வெடி சப்தம், மாவட்டத்தின் 40 கி.மீ. சுற்றுவட்டாரத்தை அதிர வைத்தது. கடந்த ஆண்டு லாக்டவுனிலும் இதேபோல் விமானங்கள் பறந்தன

மீண்டும் பயங்கர சப்தம்
கடந்த சில வாரங்களாகவும் இதேபோல் விமானங்கள் தாழப் பறந்து அச்சமூட்டுகின்றன. இந்த விமானங்கள் எங்கிருந்து இயக்கபடுகின்றன என்பதற்கான பதில் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ரங்கமலை ஆய்வா?
பொதுவாக திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையில் உள்ள ரங்கமலை மீது சிறு விமானங்கள் பறப்பது வழக்கம். அப்பகுதியில் கனிம வள ஆய்வுக்காக இந்த விமானங்கள் பறக்கவிடப்படுவதாக சொல்லப்படுவது உண்டு.

வட மாநிலத்தவர் ஆய்வுகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் வட மாநில அதிகாரிகள் முகாமிட்டு கனிமவளம் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். வேடசந்தூர் வட்டத்தில்தான் இந்த கனிமவள ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஆனால் என்ன கனிம வளத்துக்காக ஆய்வுகள் நடக்கின்றன என்பது மட்டும்தான் யாருக்கும் தெரியாதது.

பயிற்சி விமானங்களா?
அதேபோல் தஞ்சாவூர், கோவை விமான படை தளங்களில் இருந்து பயிற்சி விமானங்கள் பறக்கின்றன என பொதுவாக ஒரு பேச்சு உண்டு. ஆமாம் பயிற்சி விமானங்கள்தான் பறக்கின்றன என்றாவது சொல்லிவிட்டாலும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நிம்மதி அடைவார்கள். யார்தான் எப்போதுதான் பதில் தருவார்களோ?












Click it and Unblock the Notifications