சசிகலா பற்றி பேசுவது டைம் வேஸ்ட்.. வடிவேலு போல காமெடி பண்ணிட்டு இருக்காரு! விளாசும் நத்தம் விஸ்வநாதன்
திண்டுக்கல்: மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட நத்தம் விஸ்வநாதன், சசிகலா குறித்து சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி குழப்பம் நீட்டித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக
இருப்பினும், இந்தப் பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சென்னை ஐகோர்டின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே அதிமுக சாவி தொடர்பான வழக்கிலும் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

எடப்பாடி பழனிசாமி
இது எடப்பாடி தரப்பிற்கு உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. அதேநேரம் ஓபிஎஸ் பக்கமும் சமீப காலமாக சில ஆதரவாளர்கள் சென்று வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கட்சிக்குள் தனக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி இறங்கி உள்ளார். இதற்காகத் தான் சில நாட்களுக்கு முன்பு, அதிமுக தலைமை அலுவலகத்திலும் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

போராட்டம்
கட்சிக்குள் ஓபிஎஸை சமாளிக்கும் அதேநேரத்தில், திமுக அரசுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதைச் சாடி இருந்தது. மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

நத்தம் விஸ்வநாதன்
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தைத் திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வால் ஏழை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வடிவேலு போல
தொடர்ந்து பேசிய அவர், "சசிகலாவைப் பொருத்தவரை அது முடிந்து போன சகாப்தம்.. மீண்டும் மீண்டும் அவரை பற்றி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதெல்லாம் குறித்துப் பேசி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான் என வடிவேல் சொல்வது போல் நான் பொதுச் செயலாளர் என்று அவர் கூறி வருகிறார்.

டைம் வேஸ்ட்
அதிமுக கட்சிக்காரர்களோ, பொதுமக்களோ அந்த அம்மாவை பற்றி யாருக்கும் நினைக்கக் கூட நேரமில்லை" என்று கடுமையாகச் சாடினார். மாநிலம் முழுக்க பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இன்னும் கூடத் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் எனக் கூறி வரும் நிலையில், நத்தம் விஸ்வநாதனின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications