"பொன்னியின் செல்வன்".. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த "செம டைமிங்" கிஃப்ட்!
திண்டுக்கல்: திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து வருகை தந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்குச் சென்றார்.

திண்டுக்கல்லில் மோடி
ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மு.க. ஸ்டாலின் பரிசு
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு வரும் வடமாநில தலைவர்களை வரவேற்கும் போது, தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும், திராவிட சித்தாந்தங்களை எடுத்துரைக்கும் வகையிலும் புத்தகங்களை பரிசாக வழங்குவதை வழக்காக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருக்குறளை வழங்கியுள்ளார். இதனால் இம்முறை என்ன புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறித்த ஆர்வம் எழுந்தது.

பொன்னியின் செல்வன்
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்து வரவேற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் நெஞ்சங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறது. சோழ பேரரசின் எழுச்சியையும், ராஜராஜ சோழனின் நிர்வாகத்தையும், ஆதித்த கரிகாலன் கொலையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலை முதல்வர் ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளார்.

மீண்டும் ஆர்வம்
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அண்மையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாகியது. இதனால் கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சுகள் அனைத்து தரப்பிலும் அதிகமாக இருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் நாவலை முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு பரிசாக வழங்கியுள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications