சைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க!
விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் தங்கம் வாங்கியுள்ளனர்.
திண்டுக்கல்: சாதனைகள் மட்டும் அரசுப்பள்ளியின் நோக்கம் அன்று பலரின் சாதனைகளை வெல்வதும் அரசுப்பள்ளியின் லட்சியம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார்கள் கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மண்டல போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் இராமநாதபுரம் அரசு பள்ளி மேல்நிலை பள்ளி மாணவிகளும் பங்கேற்றனர். இறுதியில், இப்பள்ளியின் சார்பாக 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் என 4 பரிசுகளை ஒட்டுமொத்தமாக பள்ளி மாணவிகள் அள்ளி சென்றுவிட்டனர்.

சைக்கிளிங் போட்டி
5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி அனிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் மாணவி பிரமிளா வெள்ளிப் பதக்கம் வென்றார். பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் தங்கம் வென்றார்கள்.

தலைமை ஆசிரியர் பாராட்டு
வெற்றி பெற்ற இவர்கள் அனைவருமே அடுத்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டிகளில் பங்கேற்க போகிறார்கள். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன், உதவி தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, அய்யாக்கண்ணு மற்றும் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீனதயாளன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்திய ஜோதி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

பரிசு மழையில் மாணவிகள்
தங்கம், வெள்ளிகளை குவித்து மாநில போட்டியில் பங்கேற்க போகும் மாணவிகளுக்கு பரிசு மழையும் குவியத் தொடங்கி உள்ளன. அதன்படி மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மிதிவண்டி மற்றும் ரூ.5000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை ஆசிரியர்களும் உதவும் கரங்களும் இணைந்து வழங்கினர்.

உதிர்க்கும் நன்றிகள்
இதேபோல, வைஷ்ணவ் என்பவர் 2 கணினிக்கான உபகரணங்களை வழங்கினார். தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உதவியர்களுக்கும், உதவி வருபவர்களுக்கும் கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications