மனைவியை தங்கையாக மாற்றி "வீரபாகுவான" டேவிட்.. பேக்கரி ஓனரிடம் லட்சங்களை சுருட்டிய பகீர் சம்பவம்
திண்டுக்கல்: மனைவியை தங்கை என அறிமுகம் செய்துவிட்டு பேக்கரி கடைக்காரருடன் பழக விட்டு வேறு அவரிடம் இருந்து ரூ 7 லட்சம் பணத்தை சுருட்டிய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (25). கூலி தொழிலாளியான இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவியும் விஜிட் விஜய் (3), வெற்றிமாறன் என்ற 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
கூலி தொழிலாளியான கார்த்திக் ராஜா தான் சேமித்த பணத்தைக் கொண்டு மேலும் 3 பேருடன் கூட்டாக தேனி பகுதியில் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

சமூகவலைதளங்களில் நாட்டம்
கார்த்திக் ராஜாவுக்கு சமூகவலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றில் அதிக நாட்டம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் பல்லடம் அருகே இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்
இதையடுத்து இருவரும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பரஸ்பரம் காதலை வளர்த்துள்ளனர். பின்னர் சத்யாவின் சகோதரர் என்று டேவிட் பிரசாந்த் அறிமுகமாகி உள்ளார். அவர்களிடம் கார்த்திக் தங்களது குடும்ப விவரங்கள், செய்து வரும் தொழிலில் வருமானம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டதாக தெரிய வருகிறது.

குத்தகைக்கு பேக்கரி
பின்னர் தங்களது பகுதியில் பேக்கரி ஒன்று குத்தகைக்கு இருப்பதாகவும் அதனை நாம் இருவரும் சேர்ந்து எடுத்து நடத்தினால் லட்சக்கணக்கில் லாபம் கொட்டும் என்று டேவிட் கூறியுள்ளார். மேலும் இடுவாயிலுள்ள ஒரு பேக்கரியை வளைத்து வளைத்து தனது செல்போனில் வீடியோவாக படம்பிடித்த டேவிட் பிரசாந்த் அதனை கார்த்திக் ராஜாவின் வாட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

நம்பிய கார்த்திக் ராஜா
இதனைத் தொடர்ந்து டேவிட் பிரசாந்தின் வார்த்தைகளை உண்மை என நம்பி கடந்த சில மாதங்களாக டேவிட் பிரசாந்தின் வங்கிக் கணக்கிற்கு இதுவரை ரூ 7 லட்சத்து 65 ஆயிரம் வரை பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பலமுறை பணம் அனுப்பிய நிலையில் எந்த ஒரு ஆவணங்களும் கொடுக்கப்படாததால் சந்தேகமடைந்த கார்த்திக் ராஜா டேவிட் பிரசாந்துக்கு சொல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் வந்து பார்த்தபோது இவர்கள் சொன்ன கடையில் வியாபாரம் நடைபெற்று வந்துள்ளது கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கவலைப்பட வேண்டாம் என ஆறுதல்
இதுகுறித்து டேவிட்டிடம் கார்த்திக் ராஜா விசாரித்தபோது நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்த கடை நமக்குத்தான். அது நமக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒரு 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடை நமக்கே சொந்தமாகிவிடும் என்றும் கார்த்திக்கிடம் ஆசை வார்த்தை கூறி அனுப்பியுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில்
பின்னர் அடுத்தடுத்த நாட்களில் கார்த்திக் ராஜா தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதால் நேரடியாக பல்லடம் வந்து பார்த்துள்ளார். அப்போது சத்யா, டேவிட் பிரசாந்த் ஆகிய இருவரும் இருந்த வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை அல்ல, கணவன் மனைவி என்று சொன்னதை கேட்டு கார்த்திக் அதிர்ந்து போனார்.

திட்டம் போட்டு ஏமாற்றிய தம்பதி
காதலி என நினைத்து பழகிய நிலையில் அவர் இன்னொருவரின் மனைவி என்றும் தன்னை இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு ஏமாற்றியுள்ளனர் என்றும் கார்த்திக் ராஜாவுக்கு புரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சூலூரில் உள்ள தனது மனைவியின் தாய்மாமா மூக்கையாவிடம் கார்த்திக் ராஜா கூறியுள்ளார். ஆனால் தனக்கு ரூ 2 லட்சம் கொடுங்கள். கார்த்திக் உங்கள் வழிக்கு வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்" கூறியதால் கார்த்திக் தனது உறவுக்காரரிடமும் ஏமாந்துவிட்டார்.

கணவர் பார்த்தது கூட இல்லை
இதுகுறித்து கார்த்திக் ராஜாவின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில் கணவருக்கும் அந்த பெண் சத்யாவுக்கு முகநூல் நட்பு இருப்பது எனக்கு தெரியும். இந்த நட்பின் அடிப்படையில் பேக்கரி கடையை வாங்க பணம் கொடுத்தோம். தற்போது பேக்கரி வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டதற்கு எனது கணவரால் சத்யா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு அந்த பணம் சரியாகிவிட்டதாகவும் டேவிட் கூறினார். ஆனால் சத்யாவை எனது கணவர் நேரில் கூட பார்த்ததில்லை என தெரிவித்தார்.

பல்லடம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்
இது தொடர்பாக பல்லடம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தங்களை ஏமாற்றிய கணவன்- மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். வடிவேலு சினிமா பட காமெடியில்தான் அக்காவை வைத்து பேக்கரி நடத்திவருவதாகவும் இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் அர்ஜுனிடம் சொல்வார் வடிவேல். ஆனால் அர்ஜுனோ இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல, அவர்கள் ஒவ்வொருவராக வடிவேலுவிடம் விஷயத்தை கேட்டு கிண்டல் செய்துவிட்டு செல்வர். இந்த காட்சியை போல் தனது மனைவியையே தங்கையாக நடிக்க வைத்து ஒரு பேக்கரி ஓனரிடம் லட்சக்கணக்கான பணத்தை ஆட்டைய போட்டுள்ளார் இந்த கணவர்.












Click it and Unblock the Notifications