"உச்சிக்கு" போன அண்ணாமலைக்கு.. மீண்டும் ஒரு "சிக்கல்"?.. தலைவரே இது நியாயமா? பழனி மலை முருகா முருகா
திண்டுக்கல்: மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. என்ன நடந்தது?
கடந்த ஒரு வருடமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுபிஸியாக இருக்கிறார்.. "என் மண் என் மக்கள்" யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தி காட்டிய கையோடு, தேர்தல் பிரச்சாரத்தையும் சூட்டோடு சூடாக ஆரம்பித்தார்.

பிரச்சாரம்: தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், இங்கு தேர்தல் முடிந்த கையோடு கேரளாவுக்கும், அங்கிருந்து கர்நாடகாவுக்கும் என தீவிரமான வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்..
இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் தங்கி குடும்பத்தினருடன் 3 நாட்கள் ஓய்வெடுத்தார். அப்போது கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பழனி கோயில்: பிறகு அங்கிருந்து பழனிக்கு கிளம்பினார்.. பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் சாமி கும்பிட்டார் அண்ணாமலை.. பிறகு போகர் சித்தர் சன்னிதிக்கு சென்று வணங்கினார்... அங்கிருந்து, ரோப் கார் வழியாகவே அடிவாரத்திற்கு இறங்கினார்..
பிறகு அங்கிருந்து கோவைக்கு கிளம்பி சென்றுவிட்டார். எந்த கோயிலுக்கு அண்ணாமலை செல்கிறாரோ, அங்கெல்லாம் பொதுமக்கள் அண்ணாமலையை பார்த்ததுமே குதூகலமானார்கள்.. பலரும் திரண்டு வந்து அண்ணாமலைக்கு "வணக்கம்" சொன்னார்கள்.. ஆர்வத்துடன் அண்ணாமலையுடன் சேர்ந்து செல்பியும், போட்டோக்களும் எடுத்துக்கொண்டார்கள்..
ஹைகோர்ட் தடை: ரோப் மூலம் பழநி மலையடிவாரத்தில் இறங்கியதுமே, அண்ணாமலைக்கு சிக்கல் வேறு ரூபத்தில் ஆரம்பமாகிவிட்டது.. அதாவது, பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் ஆர்வமிகுதியில், மூலவரை செல்போனில் படம் பிடித்து வந்தனர். ஆனால், அங்கு செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று ஹைகோர்ட் தடை உத்தரவு போட்டுவிட்டது.
எனவே, பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பத்திரப்படுத்தி வைக்க, "செல்போன் பாதுகாப்பு மையம்" அங்கேயே கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: ஆனால், பழநி கோயிலுக்கு சென்ற அண்ணாமலை, தடையை மீறி செல்போன் கொண்டே வந்தாராம்.. அதுவும் இல்லாமல், ரோப்கார் நிலையத்திலேயே செல்போனில் பேசியிருக்கிறார்.. அவர் செல்போன் பேசியதையும் யாரோ வீடியோ எடுத்துவிட்டார்கள்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப் பார்த்த நெட்டிசன்கள், " அண்ணாமலைக்கு ஒரு நியாயம்? பக்தர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேள்விகளை கேட்க துவங்கியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் பெரிதாகி கொண்டிருப்பதால், "அண்ணாமலை செல்போன் பயன்படுத்தியது தொடர்பாக ரோப்கார் நிலைய கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது" என்று கோயில் நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications