திண்டுக்கல்லில் ஆச்சரியம்.. சவுடம்மா "வேசுக்கோ, தீசுக்கோ".. சின்னாளப்பட்டியில் பறந்த கத்திகள்.. ஆஹா
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயிலில் நடைபெற்ற விழா ஒன்று, இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
ஸ்ரீ சௌடாம்பிகை அம்மன் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்தது.. இந்த அம்மனுக்காக நடத்தப்படும் திருவிழாக்களும் பிரசித்தி பெற்றவையாக விளங்கி கொண்டிருக்கின்றன.

சிறப்பு வழிபாடுகள்: சவுடேஸ்வரி அம்மனுக்காக பக்தர்கள் விரதமிருந்து இந்த விழாவை முன்னெடுத்து செய்வார்கள்.. அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அப்போது கத்தியில் பூ சுற்றி, அதில் காதோலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடுகளையும் செய்து, கரக ஊர்வலம் நடத்துவார்கள்.
சமீபத்தில்கூட, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சௌடாம்பிகை அம்மன் கோயிலில் 76ம் ஆண்டு பங்குனி திருவிழாவுக்கான கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
சௌடாம்பிகை அம்மன்: அப்போது காரைக்குடி முத்தாலம்மன் கோவில்குளக்கரையில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்தை பக்தர்கள் வழிபட்டனர்.. பிறகு, 50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் சௌடாம்பிகை அம்மனை ஆலயத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது, மேலாடையின்றி 2 கைகளிலும், கத்தியால் தங்கள் உடலை வருத்தி, ரத்தம் சிந்தி பக்திபரவசத்துடன் அம்மனை "வா வா" என்று சிறுவர்களும், இளைஞர்களும் கரவோசையில் அழைத்து, அம்மன் கரகத்தில் புறப்பட்டு செல்லும் வினோத வழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு சங்கிலி: அதாவது, கரகத்தில் உள்ள அம்மனுக்கு அரணாக விரதம் இருக்கும் பக்தர்கள், மேலாடை எதுவுமின்றி பாதுகாப்பு சங்கிலி போல கரகத்தை சௌடாம்பிகை கோவிலுக்கு அழைத்து செல்வார்கள்.
அதுபோலவே, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியிலும் சௌடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் விழா வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது.. கீழக்கோட்டை ஸ்ரீ மதுராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவுக்காக கடந்த 1 வாரத்திற்கு முன்பேயே பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டிக்கொண்டார்கள்..
பிருந்தாவன தோப்பு: இந்த கோயிலின் பெரிய கும்பிடு விழாவானது முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதன்படி, பாரம்பரிய வழக்கப்படி மேலக்கோட்டை ஜமீன்தார் முத்துராஜா தானமாக வழங்கிய குதிரையில் பிருந்தாவன தோப்பிலிருந்து அம்மன் அழைத்து வரப்பட்டார்.
அப்போது செவ்வலேர் வம்சத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தியில் பூ சுற்றி, அதில் காதோலை கருகமணி வைத்து அலங்கரித்து வழிபாடு செய்து, அந்த குதிரை வாகனத்தில் வைத்து அழைத்து வந்தனர்..
சவுடம்மா தீசுக்கோ: இந்த கரக ஊர்வலத்தில், காப்பு கட்டி விரதம் இருந்த சிறுவர்களும், இளைஞர்களும், பெரியவர்களும் ஒன்றாக சேர்ந்து, "சவுடம்மா தீசுக்கோ" என்ற கோஷத்துடன் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தபடியே வந்தனர்.
பிறகு அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள்தான் இணையத்தில் வெளியாகி பரவசம் தந்து வருகிறது..
மஞ்சப்பொடி: இதுபோன்ற ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் "வேசுக்கோ, தீசுக்கோ" என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைக்கும்போது, பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடுமாம்.. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே செல்வார்களாம். இந்த திருமஞ்சன பொடியை காயம் பட்ட இடத்தில் வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications