ஏலக்கா மாலை! நம்ம தம்பி விஸ்வநாதன்..அன்பு கட்டளை போட்ட திண்டுக்கல் சீனிவாசன்! ‘அவருக்கு’ மட்டும் நோ!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவின் இரு துருவங்களாக செயல்பட்டு வரும் அதிமுக மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தொண்டர்களை ஒரே அணியில் செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, திண்டுக்கல் சீனிவாசன் தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகளை நத்தம் விஸ்வநாதனையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என சொல்கிறாராம்..
அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றியுள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இதேபோல் அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக ஓபிஎஸ்ஸின் முன்னாள் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக அளவில் அதிமுகவில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டமாக திண்டுக்கல் உருப்பெற்றுள்ளது.

இரு துருவங்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு துருவங்களாக வலம் வந்த திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தற்போது ஓர் உயிர் ஈருடல் ஆக காட்சி தருவது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் ஓபிஎஸ் ஆதரவாளராக நத்தம் விசுவநாதனும் இபிஎஸ் ஆதரவாளராக திண்டுக்கல் சீனிவாசனும் மாவட்டத்தில் கள அரசியல் நடத்தி வந்தனர்.

ஓபிஎஸ்க்கு ஆதரவில்லை
இதனால் அதிமுகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இருவரும் இபிஎஸ் பக்கம் சாய்ந்தனர். பக்கத்து மாவட்டக்காரர் மற்றும் ஒரே சமூகம் என்ற போதிலும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் அதிமுகவில் நடந்த களோபரங்களைத் தொடர்ந்து இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் ஆனவுடன் விஸ்வநாதனும் சீனிவாசனும் முக்கியத்துவம் பெற்றனர். இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.

திடீர் ஒற்றுமை
இதனை அடுத்து இருவரும் ஒருங்கிணைந்து சென்றால் தான் ஓபிஎஸ் மாவட்டத்திற்கு உள்ளே நுழைய முடியாது என அறிந்து முடிவெடுத்தவர்கள் தற்போது மாவட்ட அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்களை ஒரே அணியில் செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு நிகழ்வாக திண்டுக்கல் சீனிவாசன் தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகளை நத்தம் விஸ்வநாதனையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என சொல்லுகிறார். அதே போல் விஸ்வநாதனும் திண்டுக்கல் சீனிவாசனை சந்திக்க வேண்டும் என சொல்லிவருகிறார்.

தொண்டர்கள் உற்சாகம்
இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசனை சந்திக்க சென்ற நிர்வாகி ஒருவர் ஏலக்காய் மாலையை சீனிவாசனுக்கு அணிவித்துள்ளார். அப்போது சீனிவாசன் இதே மாதிரி மாலையை தம்பி விசுவநாதனுக்கும் நீ போட வேண்டும் என அன்பு கட்டளை இட்டுள்ளார். இதேபோன்று காட்சிகள் இருதரப்பிலும் மாறி மாறி நடந்து வருகின்றன. எக்காரணம் கொண்டும் ஓபிஎஸ் மாவட்டத்திற்குள் தன் மூக்கை நுழைத்து விடக்கூடாது என்பதற்காக இருவரும் கைகோர்த்து செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications