மாடு மேல நம்ம மோதினா ஃபைன் போட்ருவாங்க போலயே..கொஞ்சம் கருணை காட்டுங்க ஆபீசர்ஸ்! திணறுது திண்டுக்கல்!
திண்டுக்கல்: நீதிமன்ற உத்தரவு, மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை என எதையுமே கண்டுகொள்ளாதது போல தான் இருக்கிறது திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை. சாலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் நடமாடி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சத்தோடு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போகிற போக்கில் மாடுகள் மீது மக்கள் வாகனங்களை மோதினால் அபராதம் விதித்தாலும் விதிப்பார்கள் என வேதனையுடன் கூறுகின்றனர் மக்கள்.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திண்டுக்கல்லில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் மாடுகள் தாக்கி படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

மேலும், தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை கடித்து அச்சுறுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதும், சாலைகளில் மாடுகள் உலாவுவதும் பொதுமக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ளது.
பெயருக்கு மட்டுமே திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, மாதத்திற்கு ஒரு முறை கணக்கு காட்டுவதற்காக மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதோடு, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி உத்தரவிட்டிருந்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகளை திரிய விட்டு பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையூறு இல்லாமல் தங்களது சொந்த இடத்தில் அடைத்து வைத்து சுகாதார முறையில் கழிவுகளை அகற்றி பராமரித்திட வேண்டும். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் எவ்வித முன் அறிவிப்புமின்றி மாடுகளை பிடித்து பவுண்டில் அடைக்கப்படுவதுடன், மாடுகளின் உரிமையாளருக்கு முதல் முறை மாடு ஒன்றிற்கு ரூ.2,000 வீதமும், இரண்டாம் முறை ரூ.5000 வீதமும், அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.
அதே உரிமையாளர் மீண்டும் மாடுகளை திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது. மாடுகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும். மேலும் 1939ம் வருட தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவுகள் 41(1) (3) (4) (8) 42,43,45,47,51 மற்றும் 134ன் கீழ் உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
கடந்த நவம்பர் மாதமே மாவட்ட ஆட்சியர் இவ்வாறாக உத்தரவிட்டிருந்த நிலையில் ஆட்சியரின் உத்தரவை நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. காலை தொடங்கி இரவு வரை சாலையில் வாக்கிங் செல்வதைப் போல மாடுகள் உலாவுகின்றன. இரவு நேரங்களில் பேருந்து நிலையம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் உலா வருகின்றன.
குறிப்பாக திண்டுக்கல் - பழனி சாலையில், பொதுமக்கள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல்லிலும் பல விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இப்படி சாலையில் போகும் போதெல்லாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை இருப்பதாக கூறும் திண்டுக்கல் வாசிகள், போகிறபோக்கில் மாடுகள் மீது பைக்கை மோதியதாக மக்களுக்கே அபராதம் விதித்தாலும் விதிப்பார்கள் இந்த அதிகாரிகள் என புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications