திமுக நிர்வாகிக்கு கத்தி குத்து.. பொன்னாடை போர்த்துவது போல் இளைஞர் வெறிச்செயல்! பரபரத்த வேடசந்தூர்
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொன்னாடை போத்துவது போல் வந்து வீரா சாமிநாதனை கத்தியால் குத்தியுள்ளார். கழுத்து அருகே காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் வீரா சாமிநாதன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சி சார்பாக நிர்வாகிகள் பலர் அவரை சந்தித்து வந்திருக்கின்றன. அதேபோல் வீட்டில் இருந்து அவரை பலரும் வந்து சந்தித்து இருக்கின்றனர்.

அப்போது நிர்வாகிகள் சில வீரா சாமிநாதனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறி வந்தனர். இதில் இளைஞர் ஒருவரும் பொன்னாடை போர்த்துவதற்காக அருகில் வந்தார். இதில் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளைஞர் வீரா சாமிநாதனை கத்தியால் குத்தினார்.
இதில் வீரா சாமிநாதனுக்கு கழுத்து அருகே கத்திக் குத்து காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகி ஒருவர் இதனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் தொண்டர்கள், நிர்வாகிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கத்தியால் குத்திய இளைஞரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் மணி (வயது 22) என்பது தெரியவந்தது.
எதற்காக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனை கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications