ஒரே கடி..ஒன்றரை வருடத்தில் 20 ஆயிரம் பேர்! பதற வைக்கும் ‘பைரவாக்கள்’.. கொஞ்சம் மனசு வைங்க ஆபீசர்ஸ்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2023 வருடம் நாய்கள் கடித்ததில் 14,000 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த வருடம் தற்போது வரை சுமார் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில், அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுவாக நாய்கள் என்றாலே பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளின் பட்டியலில் வருகிறது. அதனை தங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை போலவே அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து கவனித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ரோட்டில் உணவுக்கே வழி இன்றி கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் நூற்றுக்கணக்கில் ஆங்காங்கு வலம் வருவதை காண முடிகிறது.
நாய்கள் ஜாக்கிரதை: இப்படி திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ரவுண்ட் ரோடு புதூர், எஸ்பி முகம் அலுவலகம் ,கக்கன் நகர்,ரயில் நிலையம், நாகல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் ஆங்காங்கே சாலைகளின் ஓரங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் கூட்டம் கூட்டமாக வலம் வருவதை காண முடிகிறது. இந்த நாய்கள் எல்லாம் உணவுக்கு வழியின்றி பொதுமக்கள் சாலைகளில் வீசி செல்லக்கூடிய குப்பைகளில் இருக்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

மக்கள் அச்சம்: அப்படி யாரேனும் உணவு பொட்டலங்களை வீசி சென்றால் நாய்களுக்குள் ஏற்படும் சண்டையின் காரணமாக அவ்வளியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு கடும் இடைஞ்சல் ஏற்படுவதோடு விபத்தும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகளில் வயதானவர்கள்,பெண்கள், குழந்தைகள் என பலரும் தினசரி நடை பயிற்சி மேற்கொள்வது வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும் போதும் அவர்களை துரத்துவதும், கடிப்பதும் அரங்கேறி வருகிறது.

நாய்கடியால் சிகிச்சை: இது மட்டுமின்றி ஒரு சில தன்னார்வலர்கள் தங்கள் குடியிருப்புக்கு அருகிலே ஐந்து முதல் பத்து நாய்களுக்கு உணவளித்து வருவதும் பெருமைக்குரியது. ஆனால் அப்படி தெரு நாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள் அவற்றுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து கொடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வளர்த்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மட்டும் திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டு 14,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கட்டுப்பாடு அவசியம்: அதுமட்டுமின்றி இந்த வருடம் தற்போது வரை ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளோ ஏதேனும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டும் கண் துடைப்பிற்காக அவ்வப்போது நாய்களை பிடித்து செல்வதும் அவற்றிற்கு தடுப்பூசி செலுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. பின்னர் இதுபற்றி கண்டு கொள்வதே கிடையாது என்பதே பொதுமக்கள் அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து திண்டுக்கல் கால்நடை பன்முக மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அப்படி வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே வந்து அதற்கு தடுப்பூசி செலுத்தி விட்டு செல்கின்றனர். ஆனால் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தான் தடுப்பூசி செலுத்துவது, அதற்கு கருத்தடை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications