525 வாக்குறுதிகள் கொடுத்தாங்க.. வெறும் 10% மட்டுமே திமுக நிறைவேற்றி இருக்கு.. எடப்பாடி கேள்வி!
திண்டுக்கல்: 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம், இலவச லேப்டாப் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். செப்டம்பரில் முதல் 4 நாட்கள் மதுரையில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று காலை திண்டுக்கல் வந்த அவர், பல்வேறு பகுதிகளிலும் மக்களை சந்தித்து திமுகவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அந்த வகையில் நத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில், அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியது. தற்போதைய திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக, அதிமுக ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
குடிமாராமத்து திட்டத்தின் மூலம் நீர் சேமிப்பு, மும்முனை மின்சார வசதி, பயிர் சேதத்திற்கு நிவாரணம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளை இமைக் காப்பது போல பாதுகாத்தது அதிமுக அரசு. அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிவித்த 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தபின் திருமண உதவி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் போன்றவற்றை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சியில் ரூ.7,300 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட இலவச மடிக்கணினி திட்டம் அற்புதமானது. ஆனால், ஏழைகளுக்கு எதுவும் செய்தால் ஸ்டாலினுக்கு பொறுக்காது.
மேலும், 4000 அம்மா மினி கிளினிக் திட்டம், பொங்கல் பரிசாக ரூ.2,500, அம்மா இருசக்கர வாகன மானியம், ஏழைகளுக்கு இலவச வீடு உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தை காப்பாற்றியது அதிமுக அரசு தான். அதேபோல் திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.
பெரும்பாலான மதுக்கடைகளை திமுகவினரே எடுத்து நடத்தி வருகிறார்கள். கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மட்டும் இந்த ஆட்சியில் சரியாக நடக்கிறது. திமுக அரசு 30 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருப்பது, அதிமுகவின் தொடர் அழுத்தத்தால் மட்டுமே சாத்தியமானது. இந்த ஊழல் அரசு தொடர வேண்டுமா?
தொடர்ந்து, ரூ. 420 கோடி மதிப்பில் நத்தம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நத்தம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மா விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு திமுக அரசு நிவாரணம் வழங்கவில்லை. புளி விவசாயத்தை பாதுகாக்க கிடங்கு அமைக்கப்படும். மக்களின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications