Exclusive:உயிரை கையில பிடித்து கொண்டு போவதுன்னா என்ன தெரியுமா? திண்டுக்கல் ரயில்வே சுரங்க பாதை பகீர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இருந்து கரூர் செல்லக் கூடிய குஜிலியம்பாறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்க பாலம் எத்தனை பெரிய துயர சம்பவத்தை 'சம்பவிக்கப் போகிறதோ? என ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பீதியுடனேயே கடந்து செல்கின்றனர். ரயில்வே சுரங்கப் பாதையின் பக்கவாட்டு சுவர்களில் கோடையிலும் கூட வற்றாத நீர் ஊற்று கொட்டி, சிறு தூறல் மழைக்குக் கூட முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை வதைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ரயில்வே சுரங்க பால பயணம்.

திண்டுக்கல் மாநகரத்தை விட்டு வெளியேறி மதுரை, கரூர், திருச்சி செல்ல சூப்பர் பைபாஸ் சாலை வசதிகளுடன் நெடுஞ்சாலைகள் ஜொலிக்கின்றன. திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்வோர் பயன்படுத்துவது பழைய கரூர் சாலைதான். இந்த பழைய கரூர் சாலையில்தான் திண்டுக்கல்லின் அடையாளமான ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி, பிரசித்தி வித்யோதயா பள்ளி, மகிரிஷி பள்ளி, வேலம்மாள் பள்ளி, எஸ்பிசி அகாடமி என கல்வி நிறுவனங்களும் நிறைந்தே இருக்கின்றன. திண்டுக்கல்லின் அண்மைய விஸ்வரூபமான வளர்ச்சியும் கூட இந்த பழைய கரூர் சாலையில்தான்.. என்.எஸ் நகர், ஆர்.ஆர்.நகர், ஜிஎஸ் நகர் என திண்டுக்கல் நகரின் அத்தனை விரிவாக்கமும் இந்த சாலையில்தான்.

dindigul tamilnadu

திருச்சி, கரூர் செல்ல இந்த சாலையில்தான் முன்னர் பயணிக்க வேண்டும். அப்போது ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ரயில்வே கேட் அருகே வழிகாட்டி வியாநகரை வெறிச்சென பார்த்தபடி காத்திருந்து சென்ற திருச்சி, கரூர் செல்வோருக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்தன. ஒன்று திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலமும் கரூர் செல்லும் வாகனங்களுக்கு ரயில்வே சுரங்க பாலமும் அமைகின்றன என்பதுதான்.

இதனையடுத்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கான மேம்பாலப் பணி அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கும் வந்தது. ஆனால் கரூர் சாலையில் செல்லும் வாகனங்களுக்கான ரயில்வே சுரங்க பாலம் ஆமை வேகத்தில் நகர்த்தப்பட்டு ஒரு கட்டத்தில் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கூட்டுறவு நகர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து கரூர் சாலையை எட்ட வேண்டும்; அல்லது திருச்சி சாலையில் சீலப்பாடி பைபாஸ் போய் திரும்பி வந்து ஆயில் மில் ஸ்டாப்பை தொட்டு கரூர் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த துயரத்தையும் பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில்தான் எத்தனையோ போராட்டங்கள், குமுறல்களுக்குப் பின்னர் கரூர் சாலையின் சுரங்க ரயில்வே பாலம் எந்த அறிவிப்பும் இல்லாமலேயே திறக்கப்பட்டுவிட்டது. தொடக்கத்தில் இரு சக்கர வாகனங்கள் பயணித்தன; பின்னர் வெள்ளோட்டமாக பேருந்துகளும் பயணிக்க இப்போது அத்தனை வாகனங்களும் எளிதாகவே ரயில்வே சுரங்கப் பாதை வழியே செல்லத் தொடங்கிவிட்டன. இதனால் மகிழ்ச்சிதான்.

ஆனால் இந்த மகிழ்ச்சி ரயில்வே சுரங்க பாலம் திறந்த சில நாட்களுக்குதான். இதன் பின்னரே ரயில்வே சுரங்க பாலம் மிகப் பெரிய பேராபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது என்பது புரியத் தொடங்கியது. இந்த ரயில்வே சுரங்கப் பாதையின் பக்கவாட்டுகளில் ஊற்று நீர் குபுகுபுவென கொட்டுவதை இப்போதும் பார்க்க முடியும். இன்று நாம் வீடியோ பதிவு எடுத்த போது கூட ஊற்று நீர் கொட்டிக் கொண்டுதான் இருந்தது. இப்படி ஒரு இடத்தில் இல்லை.. ரயில்வே சுரங்க பாலத்தின் பக்கவாட்டின் பல இடங்களில் ஊற்று நீர் கொட்டுவதை காண முடியும். இதனால் 24X7 மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் ரயில்வே சுரங்கப் பாதையில் எப்போதும் நீர் தேங்கி நிற்கும். ஏற்கனவே ஊற்று நீர் தேங்கி நிற்க நேற்று முன்தினம் பெய்த சிறு தூறல் மழைக்கு இன்று வரை முழங்கால் அளவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வெள்ளத்தில்தான் அத்தனை வாகனங்களும் நீந்திச் செல்ல வேண்டிய துயரம் இருக்கிறது. இந்த ஆபத்தை விளைவிக்கும் சுரங்கபாதையில் செல்லும் போதுதான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது என்ன என்பதை நம்மாலும் உணர முடிந்தது.

dindigul tamilnadu

இந்த ரயில்வே சுரங்க பாதை சீரமைப்பு தொடர்பாக திண்டுக்கல் லோக்சபா தொகுதி எம்பி சச்சிதானந்தத்தை நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு கேட்டோம். இதற்கு பதிலளித்த சச்சிதானந்தம் எம்பி, ரயில்வே சுரங்க பாலத்தின் பணிகள் முழுமையடையவில்லைதான். பொதுமக்கள் துன்பப்படுவதால்தான் திறக்கப்பட்டது. போதுமான நிதி கிடைக்காத காரணத்தால் நீர்வெளியேற்றுகிற அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்படாமல் இருக்கின்றன. தற்போது பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில் உரிய நிதியை பெற்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய கரூர் சாலை ரயில்வே சுரங்க பாலம் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்மிடம் உறுதியளித்தார்.

காத்திருப்பு வீண் போகாது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+