கொடைக்கானலில் தடை நீங்கியது.. குணா குகையை பார்க்க அனுமதி.. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், பைன் மர காடுகள்,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலாதலங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில தினங்களாக வாகன நிறுத்தும் இடம்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. இந்தநிலையில் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதன்காரணமாக விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல் சுற்றுலா இடங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.
குணா குகை.. பைன் மரக்காடுகளுக்கு செல்ல வனத்துறை தடை.. கொடைக்கானல் சென்ற பயணிகள் ஏமாற்றம்
இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகள் செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் குடிநீர், பயோ கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது. இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையின் அறிவிப்பினால் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பைன் மரச்சோலை அருகே சாலையோரம் வேனை நிறுத்திய போது, அவ்வழியாக வந்த மற்றொரு வேன் அதன் மீது மோதியது. இதில் தூத்துக்குடியில் இருந்து சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுப்பையா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் மீது அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதில் பெண்கள், குழந்தைகள் என 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 பேர் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்தைத் தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் செந்தில் குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று முதல் குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம், காப்பீட்டு சான்றிதழ், மாசு சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே வனப்பகுதிக்குள் சுற்றுலா துறையினர் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பேரிஜம் பகுதிக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications