மச்சானுக்கு எம்.பி.சீட் வாங்க காய் நகர்த்தும் மாஜி அமைச்சர்! சத்தமில்லாமல் கிரவுண்ட் ஒர்க்!
திண்டுக்கல்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மச்சானை களமிறக்க அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தீவிரம் காட்டுகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி சீட்டை உறுதி செய்வதில் மும்முரமாக உள்ளார்.
நத்தம் விஸ்வநாதனுக்கு அரசியலில் ஆல் இன் ஆலாக இருந்து வருகிறார் அவர் மைத்துனர் கண்ணன். விஸ்வநாதனிடம் காரியம் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் பார்ப்பது கண்ணனை தான். குறிப்பாக விஸ்வநாதன் மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில் நிழல் மந்திரியாக திண்டுக்கல் மாவட்டத்தில் வலம் வந்தவர் கண்ணன்.

மலையேறினாலும் மச்சான் துணை வேண்டும் என்பதற்கேற்ப எப்போதும் தனக்கு துணையாக கண்ணனை வைத்துக்கொண்டார் நத்தம் விஸ்வநாதன். சரி விஷயத்திற்கு வருவோம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் கண்ணனை களமிறக்க விஸ்வநாதன் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
தற்போது அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநில நிர்வாகியாக உள்ள கண்ணன் ஒன்றியத் தலைவராகவும் உள்ளார். அவரை டெல்லிக்கு அனுப்பி வைப்பதில் குறியாக உள்ள அவரது மாமா விஸ்வநாதன் இப்போதே மச்சானுக்காக தேர்தல் களப்பணிகளை சத்தமின்றி தொடங்கிவிட்டார்.
கிளைத்தோறும், கிராமங்கள் தோறும் நிர்வாகிகளை அழைத்து பேசும் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோரின் வாரிசுகளும் எம்.பி.சீட்டுக்கு குறிவைத்திருக்கிறார்கள். ஆனால் ரேஸில் முந்தி நிற்பது என்னவோ விஸ்வநாதன் தரப்பு தான்.
அதிமுக சார்பில் கண்ணன் களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்து திமுக தரப்பில் வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications