பிரதமர் மோடி வருகையின் போது சதித்திட்டம்? எஸ்பிசிஐடி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்! அலர்ட் ஆகும் காவல்துறை
திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் பிரதமரோடு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பட்டமளிப்பு விழா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் அதன்பிறகு தனி விமான மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் அருகே அம்பாத்துறையில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர், அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி
தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு காரில் செல்லும் பிரதமர் 3 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகிறார். இது மட்டும் அல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். அதன் பின் மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்லும் பிரதமர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் சென்று பின்னர் தனி விமான மூலம் டெல்லி செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
தற்பொழுது பிரதமர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி அறிவுறுத்தலின் பேரில் ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் திண்டுக்கல் காந்திகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னாளப்பட்டி, அம்பாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாகனங்கள் செல்லவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உளவுத்துறை சுற்றறிக்கை
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என எஸ்பிசிஐடி எனப்படும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உளவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தலைவர்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கள், மாலைகள் உள்ளிட்ட பொருட்களை தீவிர சோதனைக்கு உட்படுத்த காவல்துறையினருக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரதமரை வரவேற்க செல்லும் முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சிக்கு வரும் செய்தியாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications