பழனியில் கேரள பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.. வந்தவர் கணவரும் இல்லை.. திடுக்கிடும் தகவல்
திண்டுக்கல் : பழனியில் கேரள பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுடன் வந்தவர் கணவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று நபர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
உடனடியாக கண்ணூர் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று பேர் கடத்தினர்
அப்போது கடந்த 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும் சென்றோம். பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்று விட்ட நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச் சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்தனர். பின்னர் என்னைத் தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

விரட்டியடித்தனர்
காலையில் தங்கும் அறையில் இருந்து தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறினேன். கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்து விரட்டி அடித்தனர். வேறுவழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டோம் . காமக் கொடூரர்கள் செய்த சித்திரவதையால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்தார்

தனிப்படை அமைப்பு
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் கொடுக்க சென்ற போது புகாரை தமிழக போலீசார் (பழனி அடிவாரம் போலீசார்) பெறாமல் அலட்சியப்படுத்தியாக பாதிக்கப்பட்ட பெண் கேரள டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அத்துடன் அந்த பெண்ணுடன் சென்ற தர்மராஜ் என்பவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு வாட்ஸ்அப்பில் புகார் அளித்தார். கேரள பெண் கொடுத்த இந்த புகார் தமிழக கேரள போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாள்ர ரவளிபிரியா பழனியில் நேரடியாக ஆய்வு செய்தார். இந்த விவகாரத்தில் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து பெண் கொடுத்த புகாரின் பேரில் கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கோயில்கள் மூடல்
குற்றம் நடந்ததாக கூறப்படும் தங்கும் விடுதி, விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெண் கொடுத்த பாலியல் புகாரில் பல முரண்பாடுகள் இருந்ததால் தமிழக போலீசார் சந்தேகம் அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்தன. அப்படியிருக்கையில் பெண் எப்படி பழனி கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்திருக்க முடியும். என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

பணம் கேட்டு மிரட்டல்
பெண்ணுடன் அறையில் தங்கியிருந்தவர் கணவர் இல்லை என்பதும், பெண்ணும் அந்த ஆணும் மதுபோதையில் தகராறு செய்துவிட்டு விடுதியை விட்டு வெளியே வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் கூறும் நாட்களில் பழனி சாலையில் பெண் நடந்து சென்றதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பெண், ஒரு ஆணுடன் குடிபோதையில் ரகளை செய்த நிலையில் மறுநாளே அறையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், பின்னர் கேரளாவில் இருந்து அலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பெண் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பலாத்காரம் இல்லை
இதனிடையே கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தெரிவித்துள்ளார். மருத்துவ செய்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என கேரள மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் பணம் பறிக்கும் நோக்கில் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் டிஐஜி விஜயகுமாரி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கேரளாவில் கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காக ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான போலீசார் கேரள மாநிலம் கண்ணூர் விரைந்துள்ளது. கேரள பெண் கொடுத்த புகாரில் உண்மை தன்மை இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications