மதுரை டூ திண்டுக்கல் வர 3.1/2 மணி நேரமாச்சு! அமைச்சர் ஐபி என்னிடம் 1 வருடமாக தேதி கேட்டார் -உதயநிதி
திண்டுக்கல்: மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்ல அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஆகக்கூடிய நிலையில் தொண்டர்கள் தந்த உற்சாக வரவேற்பால் தாம் மூன்றரை மணி நேரம் பயணித்து வந்ததாக பேசியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமி தன்னிடம் ஒரு வருடமாக தேதி கேட்டு வருகிறார் என்றும் அதனால் தான் அமைச்சராகிய பிறகு தனது முதல் வெளியூர் ஆய்வு நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தியுள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் கல்லூரியில் தனக்கு ஜூனியர் என்றாலும் அரசியலில் சீனியர் எனக் குறிப்பிட்டார் அமைச்சர் உதயநிதி.

திண்டுக்கல் மாவட்டம்
அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் வெளியூர் ஆய்வு பயணமாக நேற்று திண்டுக்கல் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அரசு மற்றும் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் இல்லம் தோறும் இளைஞரணி திட்டத்தின் கீழ் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், திண்டுக்கல் என்றாலே அது திமுகவின் கோட்டை எனப் பேசி தொண்டர்களின் கைத்தட்டல்களை அள்ளினார்.

பேலன்ஸ் செய்த உதயநிதி
மேலும், அமைச்சர்கள் ஐ.பெரிசாமியையும், சக்கரபாணியையும் சமமாக பேலன்ஸ் செய்து புகழ்ந்து பேசிய உதயநிதி, தன்னை திண்டுக்கல்லுக்கு வருமாறு அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த ஒரு வருடமாக அழைத்து வருகிறார் என்றும் இதனால் தான் அமைச்சர் என்கிற முறையில் தனது முதல் ஆய்வு நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்த தாம் தேர்வு செய்ததாகவும் பேசினார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 முக்கிய துறைகளை முதல்வர் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாக பேசினர்.

ஒரே கல்லூரியில்
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் கல்லூரியில் தனக்கு ஜூனியர் என்றாலும் அரசியலில் சீனியர் எனக் குறிப்பிட்டார் அமைச்சர் உதயநிதி. தானும் செந்தில்குமாரும் காலேஜ்மேட்ஸ் என்பது இதுவரை பலருக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் எனக் கூறினார் உதயநிதி. செந்தில்குமார் எம்.எல்.ஏ.வும், உதயநிதி ஸ்டாலினும் லயோலா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எடுத்துக்காட்டு
ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக விளங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்த அவர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு தாம் ஒவ்வொரு முறை வரும் போதும் தனக்கு அளிக்கப்படும் வரவேற்பை மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications