பாலியல் தொல்லை.. சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவு.. விடுதி காப்பாளர் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் ஜோதி முருகன். இவர் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுரபி, கபி, ராமபிரபா உள்ளிட்ட பெயரில் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கவுரவத் தலைவராகவும் இருக்கிறார்.
வ.உ.சி. நினைவுநாளை குருபூஜை என்ற பெயரில் நடத்தி வருபவர் சுரபி ஜோதி முருகன். வ.உ.சி. நினைவுநாளான நேற்றும் இவரது தலைமையில் 85-வது வ.உ.சி. குருபூஜை நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

சுரபி ஜோதிமுருகன்
மேலும் அமமுகவின் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவராகவும் இருக்கும் சுரபி ஜோதிமுருகன், அக்கட்சியின் திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டவர். அவருக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் பிரசாரமும் செய்தார்.
இவரது திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகள்தான் இன்று திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பாலியல் தொல்லை
நர்சிங் கல்லூரி தாளாளரான சுரபி ஜோதிமுருகன், பாலியல் தொல்லை தருவதாக கூறி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை கலைந்து போகச் செய்தனர். தாளாளர் ஜோதி முருகன் இரவு நேரங்களில் மாணவிகளை வெளியே கூட்டிச் செல்வதாகவும் அவரது வாகனத்தில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை அமர வைத்து பல்வேறு விதமான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இரவு போராட்டம்
இந்த நிலையில் நர்சிங் கல்லூரி தாளாளரான சுரபி ஜோதிமுருகனை கைது செய்ய வேண்டும் என்றும் தங்களது உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இன்று இரவும் முத்தனம்பட்டியில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் டிஐஜி விஜயகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். சுரபி ஜோதிமுருகன் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

போராட்டம் கைவிடப்பட்டது
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட காரணத்தினால் தற்காலிகமாக மாணவியரின் போராட்டம் கைவிடப்பட்டது. மாணவிகள் கலைந்து சென்றனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறு வேட நடிகர்
தொழிலதிபரான சுரபி ஜோதிமுருகன், 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஓரமாக கோரஸ் பாடுபவராகவும் வருவார். அந்த போட்டோவை அண்ணாத்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் உங்கள் ஜோதிமுருகன் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர்
திண்டுக்கல்லுக்கு வருகை தரும் அத்தனை சினிமா பிரபலங்களையும் சந்தித்து படம் எடுத்துக் கொள்வதுடன் அவரது கல்லூரியை சினிமா ஷூட்டிங்குக்கும் இலவசமாக வழங்குவார். இதனால் அவருக்கும் அந்த படங்களில் ஏதேனும் ஒரு சிறப்பு தோற்றத்தை இயக்குநர்கள் வழங்கிவிடுவர். மேலும் ஒருசில திரைப்படங்களையும் சுரபி முருகன் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications