பாட்டிலுக்கு 10 ரூபா EXTRA..குடிகாரர்கள் வயிற்றில் புளியை கரைத்த TASMAC! மறுபடியும் கடைக்கு போகனுமா?
திண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்த திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்யப்படும் நிலையில் பாட்டிலை திரும்ப ஒப்படைத்தால் பத்து ரூபாய் குடிகாரர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

டாஸ்மாக்
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இவை அனைத்துமே கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாட்டில் திரும்ப பெறும் திட்டம்
இந்த நிலையில் கொடைக்கானல் நீலகிரி போன்ற மலைவாசஸ்தலங்களிலும், வனப்பகுதிகளிலும் மது பாட்டில்களை வீசி எறிவதால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை எடுத்து, சுற்று சூழல் பாதிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைபிரதேசங்களில் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டது.
மதுபாட்டில் ரூ10 திட்டம்
இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தனது மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் விலையோடு, கூடுதலாக 10 ரூபாய் பெற்று கொள்ளவும், பருகிய பிறகான காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து கூடுதலாக கொடுத்து ரூ.10-ஐ திரும்ப பெறும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்டு, இதர மாவட்டங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிறப்பு ஸ்டிக்கர்
தொடர்ந்து முதற்கட்டமாக நீலகிரி கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு 15 மாவட்டங்களில் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்த திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபாட்டில்கள் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கிக்கொண்டு, மது பிரியர்களுக்கு வழங்கப்படும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களை மீண்டும் கொடுத்தால் டாஸ்மாக் அவர்களுக்கு பத்து ரூபாய் கொடுக்கும்.
மதுபிரியர்கள் எதிர்ப்பு
அதே நேரத்தில் உரிய ஏற்பாடுகள் இன்றி இந்த திட்டம் அவசரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறி டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மதுபிரியர்களும் இந்த திட்டத்திற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர். காரணம் ஏற்கனவே தமிழகத்தில் மது வகைகள் பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது பாட்டிலை திரும்ப வாங்கிக் கொள்கிறோம் என கூடுதலாக பத்து ரூபாய்க்கு கேட்கிறார்கள். பாட்டிலை கொடுப்பதற்காக மீண்டும் டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள்.. காசை கொடுங்கள் என்றாலும், சிலர் ஸ்டிக்கர் ஒட்டவில்லை, ஸ்டிக்கர் பிரிந்து விட்டது எனக் கூறுகிறார்கள் என புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications