விஜய் சம்பளம் எவ்வளவு? பிளாக்கில் எவ்வளவு வாங்குகிறார்? திண்டுக்கல் சீனிவாசன் கிடுக்குப்பிடி!
திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பவம் வாங்குகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் வொயிட் எவ்வளவு, பிளாக் எவ்வளவு என்று கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், நீங்கள் எவ்வளவு வரி கட்டுகிறீர்கள் என்றும் வினவி இருக்கிறார்.
அதிமுகவை அடிமைவாத ஊழல் கட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதன்பின் விஜய்யை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அத்தனை தலைவர்களும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே பனையூர் பண்ணையார் என்றும், கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழப்புக்கு விஜய்யும் ஒரு காரணம் என்று விமர்சித்துள்ளது.

கரூர் சம்பவத்தின் போது எடப்பாடி பழனிசாமி ஆதரவளித்த சூழலில், திடீரென விமர்சித்து வருகிறார். இதனால் தவெக தொண்டர்கள் அதிமுகவின் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் அதிமுக சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், விஜய் அரசியலுக்கு வருவதில் எந்த பிரச்சனையும் பொறாமையும் எங்களுக்கு கிடையாது. ஆனால் பில்டப் மிக பயங்கரமாக கொடுக்கின்றனர். எங்களைப் பார்த்து ஊழல் கட்சி என்று கூறி இருக்கிறார் விஜய். நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? அதில் வொயிட் எவ்வளவு? பிளாக் எவ்வளவு?
அதற்கு நீங்கள் கட்டிய வரி எவ்வளவு? மீத பணம் எங்கு வைத்திருக்கிறீர்கள்? விஜய் ஆளுங்கட்சியாக நான் இருந்தால் அரசாங்கத்திற்கு வரும் பணம் எனக்கு தேவை இல்லை என்கிறார். 2000 ரூபாய் டிக்கெட்டின் மூலம் 500 முதல் 1000 கோடி சம்பளம் வாங்குபவருக்கு இது தேவையில்லை தான். மூன்று முறை இந்திய பிரதமராக, இன்று ஊழலற்ற அரசியல்வாதியாக நரேந்திர மோடி இருக்கிறார்.
அவரையும் சேர்த்து ஊழல் கட்சி என்றால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் எங்கு பார்த்தாலும் ஊழல் நடைபெற்றது. சைக்கிளுக்கு கூட வாடகை தர இயலாத திமுகவினர் அடுத்தடுத்து இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்க ஆரம்பித்து விட்டனர்.
இந்திரா காந்தி முன்னிலையில், லஞ்சம் வாங்குவதிலே விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிப்பதற்கு ஒருவர் தகுதி உள்ளவர் என்று சொன்னால் சென்னையில் இருக்கக்கூடிய கருணாநிதி தான் என்று அன்றே நீதிபதி ஒருவர் தீர்ப்பு கொடுத்தார். அதிகமாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சி அதிமுக. மக்களிடம் வீட்டு வரி, மின்சார வரி குடிநீர் வரி என்று ஏற்றிவிட்டு ஆயிரம் ரூபாய் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் கொடுக்கின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்ய முடியும்.. அரசு சரியாக இருந்தால் தான் காவலர்கள் சரியாக இருப்பார்கள். ஒரு பக்கம் விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது, மற்றொரு பக்கம் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கு தவெகவினர், 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய நடிகர்களிலேயே அதிக வரி கட்டும் நடிகர்கள் பட்டியலில் விஜய் 2வது இடத்தில் இருந்ததாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications