முறைத்து பார்த்து.. விரக்தியின் உச்சத்திற்கே போன தோனி.. இளம் வீரரின் கூக்ளியில் சிதறிய ஸ்டம்ப்
துபாய்: சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் ஏமாற்றிவிட்டார். எவ்வளவோ முயற்சி செய்து ரன் அடிக்க முற்பட்டும், அவரால் அதை செய்ய முடியவில்லை. அந்த விரக்தி அவரது முகத்தில் எதிரொலித்தது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கிய போட்டியில், பஞ்சாப்பை சிஎஸ்கே எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் சிஎஸ்கேவை பேட் செய்ய அழைத்தது.
இந்த சீசனில் சிஎஸ்கே தோற்ற அனைத்து போட்டிகளிலுமே முதலில் பேட் செய்தது அந்த அணிதான். இதை லாவகமாக கணித்துதான் பஞ்சாப் கேப்டன் ராகுல் இந்த முடிவை எடுத்திருக்க கூடும்.

சரிந்த விக்கெட்டுகள்
ராகுல் நினைத்தது போலத்தான் நடந்தது. சென்னை துவக்க விக்கெட்டுகள், சீட்டுக் கட்டு போல சரிந்தன. அர்ஷ்தீப் சிங் பந்தில் ஷாருக் கானிடம் கேட்ச் கொடுத்து விட்டு நம்பிக்கை நட்சத்திரம் ருத்துராஜ் கெய்க் வாட் 12 ரன்களில் வெளியேறினார். மொயீன் அலியும், அதே இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து டக்கவுட்டில் வெளியேறினார். ராபின் உத்தப்பாவும் 2 ரன்னில் நடையை கட்டினார். அம்பத்தி ராயுடு நல்ல டச்சில் இருந்தவர். அவராவது டுப்ளசி கூட பார்னர்ஷிப் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால், 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 4 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், பிறகு தோனி களமிறங்கினார்.

ஆவேசம் காட்டிய தோனி
இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஓவரை டார்கெட் செய்தார் தோனி. கிரீசை விட்டு இறங்கி வந்தபோது அது ஃபுல்டாசாக கிடைக்க ஆப் சைடு பவுண்டரி கிடைத்தது. தல தோனி ஆக்ரோஷம் காட்டுகிறார் என ரசிகர்கள் ஸ்மைலியை தெறிக்கவிட்டனர். ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் அவரால் ரன் சேகரிக்க முடியவில்லை. திணறியதை கவனிக்க முடிந்தது.

அவுட்டான தோனி
இருப்பினும் டுப்ளசிக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்கும் வகையில், சிங்கிள்களை ஓடிக் கொண்டிருந்தார். 12வது ஓவரை பிஷ்னாய் வீசியபோது முதல் பந்திலேயே கிரீசை விட்டு இறங்கி பவுண்டரி அடித்தார் தோனி. ஆனால், அடுத்த இரு பந்துகள் டாட். அடுத்த பந்தில் தோனி சிங்கிள் அடித்தார். அடுத்த பந்தை டுப்ளசிஸ் சிங்கிளாக தட்டி விட்டார். கடைசி பந்தை தோனி எதிர்கொண்ட போது தனது பலமான கூக்ளி பந்தை வீசினார் பிஷ்னோய். அதை ஆப் சைடில் தட்டி விட முயன்றார் தோனி. ஆனால், பேட்டில் பட்டு ஸ்டம்பில் பட்டு பௌல்ட் ஆனார் தோனி.

கோபப்பட்ட தோனி
சற்று தடுமாறினாலும் 2 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை கொடுத்த தோனி, அவுட்டானதும், விரக்தியின் உச்சிக்கே போய் விட்டார். சில வினாடிகள் கோபத்தோடு அங்கேயே நின்று முறைத்து விட்டு பெவிலியன் நோக்கி கிளம்பினார். இளம் பவுலரிடம் தோனி அவுட்டானது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தோனி தனது பேட்டிங் திறமையை முழுமையாக இழந்து விட்டார் என்பதற்கு இன்றைய போட்டியும் ஒரு உதாரணம் என்கிறார்கள், கிரிக்கெட் பண்டிதர்கள்.

ஜெகதீஷ் ஏன் விளையாடவில்லை
தோனி இதுவரை 14 போட்டிகள் ஆடியும், மொத்தமே 100 ரன்களை கூட கடக்கவில்லை. இதனிடையே பிளேஆப் தகுதி பெற்ற பிறகும், அதுவும் குவாலிபையர் 1ல் ஆடப்போகும் நிலையிலும், ஏன் ஜெகதீஷ் இந்த போட்டியில் களமிறக்கப்படவில்லை. அவர் இருந்திருந்தால் விக்கெட் சரியும்போது தடுத்து நிறுத்தி ஆடியிருப்பாரே என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications