ஒரு தலைக்காதலால் பயங்கரம்.. கோபி அருகே மகளை திருமணம் செய்து தர மறுத்த தாய் வெட்டிக்கொலை
ஈரோடு: கோபி அருகே ஒரு தலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்துவிட்டதால், அவரது தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மலைப்பகுதியில் பிடிப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில் வசித்து வந்தவர் மேரி (56). இவரது கணவர் தமிழ்தாசன் உயிருடன் இல்லை. மேரி அந்த பகுதியில் தள்ளுவண்டி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்கள் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மற்ற 3 மகள்கள் தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பர்கூரை சேர்ந்தவர் முருகன் (27) என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், மேரியின் மகள் வர்ஷினியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்ஷினியை திருமணம் செய்து வைக்ககோரி அவரது தாய் மேரியிம் முருகன் வற்புறுத்தி வந்துள்ளார்.

திருமணம் செய்து வைக்க மறுப்பு
வர்ஷினி படித்து கொண்டிருந்ததால், மேரி திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளார். இந்நிலையில், வர்ஷினி வீட்டில் இருப்பதை அறிந்த முருகன் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் மொடச்சூர் வந்திருக்கிறார். அப்போது மேரி வீட்டின் முன்பு தனது தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மேரியிடம் வர்ஷினியை திருமணம் செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.

தடுக்க வந்தவருக்கும் வெட்டு
இதற்கு மேரி மறுக்கவே முருகன் பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக மேரியை வெட்டினார். இதில் மேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது, முருகன் இருசக்கர வாகனத்தை அங்கேயோ விட்டுவிட்டு தப்பியோடினார். அப்போது தன்னை பிடிக்க முயன்ற கணேசன் என்பவரையும் முருகன் வெட்டியிருக்கிறார். அதன்பின்னர் தப்பி ஓடிய முருகன், ரவி என்பவரை தள்ளிவிட்டுவிட்டு, அவரது இருசக்கர தப்பித்து சென்றார்.

கணேசன் படுகாயம்
இதையடுத்து, படுகாயமடைந்த மேரி, கணேசன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேரி நேற்று அதிகாலை பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோபி டி.எஸ்பி. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது லாரி டிரைவர் முருகனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அந்தியூர் போலீசார் பிடித்தனர்
இதற்கிடையே பர்கூர் மலைக்கிராமத்தில் தட்டக்கரை வனப்பகுதியில் ஒருவர் பதுங்கியிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது அந்த வாலிபர், தான் கோபியில் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு இங்கு வந்து பதுங்கியிருப்பதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அந்தியூர் போலீசார் அவரை பிடித்து கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோபி போலீசார் அவரிடம் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஒரு தலைக்காதலால், பெண்ணின் தாயை கொலை செய்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications