ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வி பயம்.. காங்கிரஸ் பின்னால் திமுக ஒளிந்திருக்கிறது.. கிருஷ்ணசாமி தாக்கு!
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒளிந்து கொண்டிருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். 22 மாத திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இடைத்தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக ஜனவரி 4ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் பின்னர் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அதிமுக போட்டி
அதேபோல் திமுக நேரடியாக களமிறங்காததால், அதிமுக தரப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக நேரடியாக களம் காண்பதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நீண்ட போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகிறது.

வேட்பாளர் அறிமுக கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார். இந்த நிலையில் ரோட்டில் திண்டல் அடுத்த வேப்பம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.

கிருஷ்ணசாமி பேச்சு
இந்த கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒளிந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 22 மாத திமுக ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

தோல்வி பயம்
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் பழைய ஓய்வூதியம் குறைப்பு, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. இப்படி தங்கள் மீது பல குறைகள் இருப்பதால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

தென்னரசுக்கு ஆதரவு
அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்க வேண்டும். மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு ஏன் இதுவரைக்கும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications