கூட்டணி தர்மம்..வெற்றிக்காக விட்டுக்கொடுப்பதில் தவறில்லை..ஜி.கே.வாசன் முடிவுக்கு யுவராஜா ஆதரவு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சட்டசபை இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றவும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவின் வெற்றிக்காக தொகுதியை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்ற ஜி.கே.வாசன் முடிவை ஆதரிப்பதாகவும் யுவராஜா கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

Erode east by election: Yuvaraja supports GK Vasans decision

ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்றைய தினம் தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசனை, அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு வருகிறது. எடப்பாடிபழனிச்சாமியிடம் ஏற்கனவே நான் ஆலோசனை மேற்கொண்டேன். அதிமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். எங்களின் இலக்கு உறுதியாக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக, தமாகா, பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கூட்டணியில் யார் வேட்பாளர் என்று ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நேற்றைய தினம் ஈரோடு வில்லரசம்பட்டியில் தமாகாவின் ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் தமாகா நிர்வாகிகள் விடியல் சேகர், யுவராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிட்டது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை தமாகா இழந்தது.இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமாகா தயாராக உள்ளது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிட்டிருக்கிறது; ஆகையால் அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தலிலும் தமாகாவுக்கே ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும். இதனை ஜிகே வாசனிடமும் வலியுறுத்துவோம். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்பதை ஜிகே வாசன் முடிவு செய்வார் என்று யுவராஜா கூறினார்.

இதனிடையே இன்று அறிக்கை வெளியிட்ட ஜி.கே.வாசன், இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமாகாவின் மூத்த தலைவர்களுடனும் நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மை கட்சியான அதிமுகவின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமாகா ஏற்றுக் கொண்டது. தமிழக மக்கள் நலன், கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப் பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும் கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை தமாகா சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் முடிவை ஏற்றுக்கொள்வதாக இளைஞரணி தலைவர் யுவராஜா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த யுவராஜா, தமிழக மக்களின் நலம், கூட்டணி கட்சிகளின் நலனை அடிப்படையாக வைத்து ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளார். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு நல்ல முடிவை தலைவர் எடுத்திருக்கிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாத்தில்தான் தோல்வியடைந்தோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றாலும் கூட்டணி தர்மப்படி கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நோக்கம். அந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுப்பதில் தவறில்லை என்றும் யுவராஜா கூறினார். கூட்டணி தர்மத்தை வாசன் காப்பாற்றியது வரவேற்கத்தக்கது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்கு உண்டான பணிகளை தொடங்கி விட்டோம். இன்னமும் கடுமையாக பணியாற்றுவோம் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+