மெக்கல்லத்தை கண்முன் கொண்டு வந்துட்டாரு.. திலக் வர்மாவின் சாதனை க்ளோஸ்.. ராகுலின் ருத்ர தாண்டவம்!
டெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 ரன்களுக்கு மேல் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் செய்யப்பட்ட அதிகபட்ச சேஸிங்காக பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் அமைந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வென்றிருந்தாலும், ஆட்டநாயகன் விருதினை டெல்லி அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் கைப்பற்றினார். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 67 பந்துகளில் 9 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 152 ரன்களை எடுத்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் இந்திய அணி வீரர் ஒருவர் முதல்முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். 226.86 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் ராகுல் ரன்களைக் குவித்தது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் புனே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்காக ஆடிய கிறிஸ் கெய்க் 175 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இதையடுத்து ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக கேகேஆர் அணிக்காக ஆடிய பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்களை விளாசி 2வது இடத்தில் இருக்கிறார். இதன்பின் கேஎல் ராகுல் 152 ரன்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
கேஎல் ராகுலின் 6வது சதம் இதுவாகும். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும் இந்த ஆட்டம் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக சையத் முஷ்டாக் அலி தொடரில் திலக் வர்மா 151 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது. இதனால் கேஎல் ராகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications