எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஈரோடு ராமலிங்கம் நிறுவனத்தில் ரூ 750 கோடி வரி ஏய்ப்பு
ஈரோடு: தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஈரோடு ராமலிங்கத்தின் நிறுவனத்தில் கடந்த 5 நாட்களாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வருமான வரி சோதனையில் ரூ 750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 5 நாட்களாக ராமலிங்கத்திற்கு சொந்தமான 28 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூபாய் 750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து ரூபாய் 10 கோடி ரொக்க பணமும், மகள், மகன்கள், மருமகள்கள் பெயரில் வாங்கி குவித்து இருந்த சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஈரோடு பூந்துறை சாலை செட்டிபாளையத்தில் தொழிலதிபரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான என்.ஆர். கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது.
திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் ராமலிங்கம் நடத்தி வருகிறார். கட்டுமான நிறுவன அதிபர் என்.ராமலிங்கத்தின் மகனுக்கும் பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் மகளுக்கும் திருமணம் நடந்தது..
அந்த சுப்பிரமணியம் வீட்டில் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது மகனுக்கு பெண்ணை எடுத்துள்ளார். ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.
ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுமான பணிகள்செய்யும் நிறுவனம் நடந்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் ராமலிங்கத்தின் நிறுவனத்தில் சொத்து மதிப்புகள் திடீரென உயர்ந்தன. இந்த நிலையில்தான் ராமலிங்கத்தின் நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் சொல்லப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக ராமலிங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் கோவையை சேர்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வந்தனர். அவல்பூந்துறை பகுதியில் உள்ள ராமலிங்கத்தின் வீட்டிலும் பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர். திருமண மண்டபத்திலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது.
செல்வசுந்தரத்தின் ஆர்பிபி கட்டுமான நிறுவனத்திலும் நவநாயக்கன்பாளையத்தில் உள்ள செல்வ சுந்தரத்தின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி பகுதியில் உள்ள ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் செயல்படும் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மொத்தம் அவருக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 5 நாட்களாக இந்த வருமான வரி சோதனை நடந்தது. தற்போது இந்த சோதனை முடிவடைந்த நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக் கட்டாக ரூபாய் 10 கோடி ரொக்கம் மற்றும் மகன்கள், மருமகள்கள் பெயரில் வாங்கி குவித்த சொத்து பத்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஈரோடு ராமலிங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் ரூ 750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications