தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை எப்போது? ப சிதம்பரம் சொன்ன குட்நியூஸ்
வருகிற மார்ச் மாதம் பெண்களுக்கு சிறப்பு திட்டம், நீங்கள் எதிர்பார்க்கும் (குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000) தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என ப சிதம்பரம் கூறினார்.
ஈரோடு: வருகிற மார்ச் மாதம் பெண்களுக்கு சிறப்பு திட்டம், நீங்கள் எதிர்பார்க்கும் (குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000) பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிகிக்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாததால், அங்குள்ள மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்றும் ப.சிதம்பரம் பிரச்சாரத்தின் போது ப சிதம்பரம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மெய்யநாதன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வடமாநிலங்கள்
அப்போது, ப.சிதம்பரம் பேசுகையில், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் வன்முறை மற்றும் கலவரங்கள் நடப்பதுடன் அங்கே அமைதியும் இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை, பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாததால் அங்குள்ள மக்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கிறது என வருகிறார்கள். தமிழ் நாட்டில் வேலை இல்லை என எவரும் அங்கு செல்வதில்லை. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை தருவதில்லை. அதை பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கூட கேட்பதில்லை. நீட் விலக்கு பற்றி எதுவும் பேசாமல் மௌன சாமியாக இருக்கிறார் ,

நச்சுப்பாம்பு பாஜக
பா.ஜனதாவுடன் இருப்பதை, பரமசிவன் கழுத்தில் பாம்பு என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் நச்சுப்பாம்பாக பாஜக உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தமிழ்நாடு வரலாற்று சிறப்பு, பண்பாடு, கலாசாரம் கொண்டது. பெரியார், அண்ணா, காமராஜர் வகுத்துதந்த கொள்கைகளில் சுயமரியாதையுடன் நாம் இருககிறோம். ஆனால் தமிழ் பண்பாடு, சுயமரியாதை, ஆதிதிராவிடர்கள், பழங்குடி மக்கள் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், சீர்திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு பாஜக தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து நிறைவேற்றிய சட்டங்களை நிறைவேற்றாமல் ஆளுநர் தடுக்கிறார். தமிழர்கள் நலன் காப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி கவர்னரை எதிர்த்து போராட வேண்டும் அல்லவா?

காங்கிரஸ் கட்சி
பெண்கள் முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை காலம் முழுவதும் பிரசாரம் செய்தவர் பெரியார். தமிழர்களின் சுயமரியாதைக்கு ஆதாரமாக இருக்கிறார். பெரியார் திமுகவினருக்கு மட்டும் பாட்டனார் இல்லை. காங்கிரஸ் கட்சியினராகிய எங்களுக்கும் பாட்டனார்தான். எதிர் அணியில் 2 பேர் நாங்கள்தான் அ.தி.மு.க. என்று நின்றிருக்க வேண்டும். அப்படி நிற்பதுதான் நியாயமாக இருக்கும். யார் பெரியவர் என மக்கள் முடிவு செய்திருப்பார்கள்.

ஸ்டாலின் சிறப்பு
கொரோனாவின் முதல் அலையில் மக்களின் உயிரை பாதுகாப்பதில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி சொதப்பினார். 2-வது அலையின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. முதல்வரான மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக நிர்வாகம் செய்து கொரோனாவை கட்டுப்படுத்தினார். முதலில் மக்களின் உயிர் முக்கியம் என்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடச்செய்தார். அடுத்து வாழ்வாதாரத்தை காப்பாற்ற அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கினார். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று இல்லம்தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். கல்வி இழப்பை சரி செய்தார்.

ப சிதம்பரம் தகவல்
12-ம் வகுப்புடன் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 தரும் திட்டத்தை கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். இதெல்லாம் நிறைவேற்றியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?. வருகிற மார்ச் மாதம் பெண்களுக்கு சிறப்பு திட்டம், நீங்கள் எதிர்பார்க்கும் (குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000) பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறேன் " இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications